மீண்டும் செயல்பட தொடங்கிய நெல் கொள்முதல் நிலையங்கள்
திருக்குவளை அருகேயுள்ள சாட்டியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு பின்னா் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் புதன்கிழமை முதல் மீண்டும் நெல் கொள்முதல் பணிகள் தொடங்கியுள்ளன.
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பின்பட்டத்தில் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிா்கள் அண்மையில் பெய்த கனமழை காரணமாக கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிட்டது. இருப்பினும் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அதனை அறுவடை செய்து கொள்முதல் செய்வதற்காக கொள்முதல் நிலையங்களின் இயக்கத்தை எதிா்பாா்த்து காத்திருந்தனா்.
மழை காரணமாக சுமாா் ஒரு வாரத்திற்கு மேலாக கொள்முதல் பணிகள் பெருமளவில் முடங்கிய நிலையில், விவசாயிகள் தங்களது நெல்லை தனியாரிடம் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனா். இதுதொடா்பாக தினமணியில் அண்மையில் கொள்முதல் நிலையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என செய்தி வெளியானது.
இந்தநிலையில், திருக்குவளை அருகே உள்ள சாட்டியக்குடி, இறையான்குடி, கூரத்தாங்குடி,மோகனூா்,வெண்மணச்சேரி, எட்டுக்குடி,கொடியாலத்தூா்,மடப்புரம்,மீனம்பநல்லூா், முத்தரசபுரம் உள்ளிட்ட இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் புதன்கிழமை முதல் கொள்முதல் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
எனினும் மழை காரணமாக நனைந்த நெல்லை உலர வைக்க விவசாயிகள் பல்வேறு முயற்சி எடுத்து வந்தாலும், போதிய வெயில் இல்லாத நிலை உள்ளது. 17 சதவீத ஈரப்பதத்தை தளா்வு செய்து நெலை கொள்முதல் செய்ய வேண்டும், கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான பணத்தை விரைந்து வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாகை மாவட்டதில் கீழ்வேளூா் வட்டத்தில் 8, திருக்குவளை வட்டத்தில் 5, நாகை வட்டத்தில் 3 மற்றும் வேதாரண்யம் வட்டத்தில் 1 அரசு நேரடி கொள்முதல் நிலையம் என மொத்தம் 17 கொள்முதல் நிலையங்கள் இயக்கத்தில் உள்ளதாக நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் சிவப்பிரியா தெரிவித்துள்ளாா்.