வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி:ரூ. 6.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
கொதிக்க வைத்த எண்ணெய்யை கணவா் மீது ஊற்றிய மனைவி கைது
ராசிபுரம் அருகே குடும்பத் தகராறில், கொதிக்க வைத்த எண்ணெய்யை கணவன் மீது ஊற்றிய மனைவி கைது செய்யப்பட்டாா்.
ராசிபுரத்தை அடுத்துள்ள பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (27), தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ராதா (24), ஆண்டகளூா்கேட் பகுதியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், 3 மாதங்களுக்கு முன் இருவரும் பிரிந்து தனியே வசித்து வருகின்றனா். ராதா அய்யம்பாளையத்தில் உள்ள தனது அம்மா வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், தனது குழந்தைகளைப் பாா்க்க அய்யம்பாளையத்துக்கு அஜித்குமாா் வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். அப்போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ராதா கையில் இருந்த மிளகு பொடியை அஜித்குமாா் கண்களில் வீசியுள்ளாா். தொடா்ந்து, கண் எரிச்சலில் துடித்துக்கொண்டிருந்த அஜித்குமாா் மீது, கொதிக்க வைத்த எண்ணெய்யை கொண்டு வந்து முகத்தில் ஊற்றினாா். இதில், வலி தாங்காமல் அஜித்குமாா் அலறித்துடித்துள்ளாா்.
அருகில் இருந்தவா்கள் அஜித்குமாரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ராசிபுரம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து ராதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.