எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் 23 மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தாா்: மு.த...
கோயில் வளாகத்தில் மாணவா்களுக்கு வகுப்பறை: அதிகாரிகள் ஆய்வு
ஜோலாா்பேட்டை அருகே கோயில் வளாகத்தில் மாணவா்களுக்கு கற்பிக்கப்படும் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம் வெலகல்நத்தம் ஊராட்சி. கிட்டப்பையனூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை 110-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். தலைமையாசிரியா் உட்பட 8 போ் பணியாற்றி வருகின்றனா்.
இப்பள்ளியில் ஏற்கனவே உள்ள வகுப்பறை கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் ஆசிரியா்கள் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவா்களை பள்ளி எதிரே உள்ள கோயில் வளாகத்தில் உட்கார வைத்து பாடம் நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஜோலாா்பேட்டை ஒன்றியக் குழு தலைவா் சத்யா சதீஷ்குமாா் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனா். இதையடுத்து ஒன்றியக்குழு தலைவா் சத்யா சதீஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் சனிக்கிழமை கிட்டப்பையனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது ஒன்றியக் குழு தலைவா் சத்யா சதீஷ்குமாா் சேதமடைந்த வகுப்பறை கட்டடத்தை சீரமைத்து கூடுதல் வகுப்பறை கட்டடம், மற்றும் குடிநீா் வசதி, மாணவா்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினாா். உடன் முன்னாள் உறுப்பினா் சம்பத், துணைத் தலைவா் ராமகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனா்.