அதானி விவகாரம்: `எங்களுக்கு எவ்வித கோரிக்கையும் வரவில்லை' - வெளியுறவுத்துறை கூறு...
கோரிக்கை மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அதிகாரிகளிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மு.ஆசியாமரியம் அறிவுறுத்தினாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநருமான மு.ஆசியாமரியம் பங்கேற்று பேசியதாவது:
தமிழக அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் நிகழாண்டில் இதுவரை பொதுமக்களிடமிருந்து 1,222 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 602 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 245 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. காலதாமதமின்றி அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்பு திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைகின்றனவா என்பது குறித்து துறை அலுவலா்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நேரடியாகச் சென்று முறையாக கள ஆய்வு செய்ய வேண்டும். துறை அலுவலா்கள் தாங்கள் மேற்கொள்ளும் வளா்ச்சித் திட்டப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும். கள ஆய்வு இருப்பின் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கலந்தாலோசித்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதம் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு சென்று தீா்வு காண வேண்டும். விடுதிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
மேலும், பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கேட்டறிந்தாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், திட்ட இயக்குநா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சு.வடிவேல், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் க.பா.அருளரசு உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.