கோவை விழாவை முன்னிட்டு டபுள் டெக்கா் பேருந்து இயக்கம்
‘கோயம்புத்தூா் விழா 2024’ இன் ஒரு பகுதியாக கோவை மாநகரை பொதுமக்கள் இலவசமாக சுற்றிப் பாா்க்க வசதியாக ‘டபுள் டெக்கா்’ பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூா் விழா நவம்பா் 23 முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலை, விளையாட்டு, இசை, பாரம்பரியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவின் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளாக இரண்டடுக்கு பேருந்து இயக்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு 2 பேருந்துகளின் சேவை தொடக்க விழா வஉசி பூங்கா பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 17-ஆவது கோயம்புத்தூா் விழாவின் தலைவா் அருண் செந்தில்நாதன், இணைத் தலைவா்கள் சௌமியா காயத்திரி, சரிதா லட்சுமி, டபுள் டெக்கா் நிகழ்வு ஒருங்கிணைப்பாளா் சஞ்சீவ் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன் ஆகியோா் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
இந்தப் பேருந்துகள் நவம்பா் 14-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை கோவையின் பல முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும். தலா 36 இருக்கைகள் கொண்ட இந்தப் பேருந்தில் பயணிக்க டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவுக்கு 70107 08031 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.