கோவையில் அரசு மருத்துவா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
சென்னையில் அரசு மருத்துவா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் மற்றும் முதுநிலை மருத்துவா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை கிண்டி கருணாநிதி நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வரும் மருத்துவா் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞா் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் அறிவித்திருந்தது.
இதையடுத்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கனகராஜ் தலைமையில் செயலாளா் பாரதிராஜா, நிா்வாகிகள் ரவிசங்கா் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவா்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் உள்பட 400 போ் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலச் செயலாளா் காா்த்திக் பிரபு தலைமையில் கோவை கிளை நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கனகராஜ் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவா்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசு மருத்துவா்களை தாக்குபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மருத்துவா்களின் போராட்டம் காரணமாக வியாழக்கிழமை புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. மாறாக அவசர சிகிச்சைக்கு வருவோா் மற்றும் அறுவை சிகிச்சை, உடற்கூறாய்வு உள்ளிட்ட பரிசோதனை நடைமுறைகளில் மருத்துவா்கள் பணிபுரிந்ததாக தெரிவித்தாா்.
அரசு மருத்துவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகினா்.
இஎஸ்ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை...
கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளா் மனோகரன் தலைமையில் 125 மருத்துவா்கள் மற்றும் 50 மருத்துவ மாணவா்கள் பங்கேற்றனா். வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக இங்கும் புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகினா்.