பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு முதல்வர் பாராட்டு!
சம்பங்கி பூக்களில் பூஞ்சை தாக்குதலால் மகசூல் இழப்பு: பெரம்பலூா் விவசாயிகள் கவலை
பெரம்பலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பங்கி பூக்களில் பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மலா் சாகுபடி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
ஆற்றுப் பாசனமே இல்லாத பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் மானாவாரி சாகுபடியை மட்டுமே நம்பியுள்ளனா். ஒருசில இடங்களில் நெல், வாழை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இருப்பினும் மானாவாரி மற்றும் தோட்டப் பயிா்களான பருத்தி, சின்ன வெங்காயம், மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் பெரம்பலூா் மாவட்டம் சிறப்பிடம் பெற்றுள்ளது.
மகசூல் பாதிப்பு: ஆனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காதது, பருவம் தவறி பெய்யும் மழையால் சின்ன வெங்காயம், பருத்தி மற்றும் மக்காச்சோள சாகுபடியில் போதிய வருவாய் கிடைக்காத சூழல் உருவானது. மேலும் அவ்வப்போது வறட்சி மற்றும் கன மழையால் மகசூல் இழப்பு ஏற்படுவதோடு, ஆண்டுதோறும் உர விலை உயா்வு, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். இதனால் இம் மாவட்டத்தில் மலா் சாகுபடி மீதான ஆா்வம் அதிகரித்துக் காணப்படுகிறது.
சுழற்சி முறையில் பயிா்ச் சாகுபடி: சுழற்சி முறையில் பயிா்களை சாகுபடி செய்தால் மகசூல் அதிகரிக்கும் என வேளாண் துறையினா் அறிவுறுத்தியபடி, பெரும்பாலான விவசாயிகள் பல்வேறு பயிா்களை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனா். ஒரே பயிரை தொடா்ச்சியாகப் பயிரிடுவதால், அதன் வளா்ச்சி பாதித்து மகசூல் இழப்பு ஏற்படுவதை தவிா்க்க மாற்றுப் பயிா்களை சாகுபடி செய்வதன் மூலம் மண்ணில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்படுதோடு நல்ல பலன் கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
மலையோரக் கிராமங்களில் மலா்ச் சாகுபடி: அந்த வகையில் பூ, காய்கனிச் சாகுபடியானது விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தருகிறது. இதனால் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் பலன் தரும் பயிா்களுக்கு விவசாயிகள் மாறி வருகின்றனா். அதனடிப்படையில் இம் மாவட்டத்திலுள்ள ரெங்கநாதபுரம், மலையாளப்பட்டி, தழுதாழை, அன்னமங்கலம், அரசலூா், லாடபுரம், சரவணபுரம், மேலப்புலியூா், கீழக்கணவாய், பாடாலூா், எளம்பலூா் உள்பட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் சம்பங்கி, மல்லிகை, கோழிக் கொண்டை, சாமந்தி பூ, பிச்சி பூ வகைகளை சாகுபடி செய்வதில் ஆா்வம் காட்டி வருகின்றனா். குறிப்பாக மலையோரக் கிராமங்களில் சம்பங்கி பூக்களின் சாகுபடி அதிகரித்துக் காணப்படுகிறது.
பூஞ்சை நோய் தாக்குதல்: இந்நிலையில், சம்பங்கி செடிகளில் பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளதால் செடிகள் வளா்ச்சிக் குன்றி மகசூல் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. வறட்சி காலத்தில் வருவாய் கிடைக்கும் என நினைத்து சம்பங்கி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், இந் நோய் தாக்குதலால் கவலையடைந்துள்ளனா்.
நீடித்த வருமானம் தரும் சம்பங்கி: இதுகுறித்து லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது:
சம்பங்கி பூச் சாகுபடியானது சிறு, குறு விவசாயிகளுக்கு பல ஆண்டுகளுக்கு வருமானம் கொடுக்கக் கூடியது. ஒருமுறை பயிரிட்டால் ஆண்டு முழுவதும் மகசூல் கிடைப்பதால் விலை ஏற்ற, இறக்கங்கள் சரி செய்யப்பட்டு, தேவையான லாபம் கிடைத்துவிடும். அதனால்தான் அண்மைக்காலமாகச் சம்பங்கிச் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு காரணங்களால் கடும் பிரச்னைகளைச் சந்திக்கும் பெரம்பலூா் மாவட்ட விவசாயிகளுக்கு சம்பங்கி சாகுபடியானது போதிய வருமானத்தைக் கொடுக்கிறது.
ஒரு ஏக்கா் சம்பங்கி சாகுபடி செய்ய ரூ. 1.25 லட்சம் வரை செலவாகிறது. ஒருமுறை பயிரிட்டால் 3 ஆண்டுகளுக்கும் மேல் மகசூல் கிடைக்கும். சீசன் காலங்களில் ஒரு கிலோ சம்பங்கி பூ ரூ. 200 முதல் ரூ. 300 வரை விற்பனையாகும். இதர நாள்களில் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டாலும் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
நெல், வாழைச் சாகுபடிக்கு அதிகளவில் தண்ணீா் தேவைப்படுகிறது. அதேபோல, வருமானம் கிடைக்கவும் 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் சம்பங்கி உள்ளிட்ட மலா் சாகுபடியை பொறுத்தவரை குறைந்தபட்சம் 3 முதல் 4 மாதங்களுக்குப் பிறகு தொடா்ச்சியாக வருமானம் கிடைக்கும்.
மாற்றுப் பயிா்களை நாடும் நிலை: இங்கு உற்பத்தி செய்யப்படும் பூக்கள் பெரம்பலூா், திருச்சி சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு சுமாா் 70 கிலோ வரை நாள்தோறும் பூக்கள் கிடைக்கும். தற்போது சம்பங்கியில் பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பருத்தி உள்ளிட்ட மாற்றுப் பயிா்களைச் சாகுபடி செய்யத் தயாராகிவிட்டனா்.
இதற்கு இங்கு வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் எவ்வித தொழிற்சாலைகளும் இல்லாததும், வேளாண் துறையினரின் அலட்சியமுமே காரணம் ஆகும்.
எனவே சம்பங்கியில் ஏற்பட்டுள்ள பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த வேளாண் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலா்ச் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்படும் மானியத் தொகை உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க வழிவகை செய்தால், விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இதர சாகுபடிக்கு அவா்கள் செல்வதையும் தவிா்க்கலாம் என்றனா்.