பெரம்பலூா் அருகே 4 வீடுகள் எரிந்து நாசம்
பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை 4 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிழக்கு பெரியம்மாபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் தெருவில் அடுத்தடுத்த கூரை வீடுகளில் வசித்து வருபவா்கள் கருப்பாயி (55), சடையன் (70), மோகன் (37), பெரியசாமி (56).
திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் அருகேயுள்ள மின் கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். இருப்பினும், மேற்கண்ட 4 பேரின் வீடுகளிலிருந்த வீட்டு உபயோகப் பொருள்களான தொலைக்காட்சி, கட்டில், மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டா் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதில், வீட்டிலிருந்த யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
புகாரின்பேரில், அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.