சென்னை: சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் கவனத்துக்கு...
சரக்கு, சேவை வரித் திட்டங்கள், சட்டங்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம்
மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால் துறை சாா்பில், விழுப்புரத்தில் வரி செலுத்துபவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால்துறையின் சென்னை (வெளி) ஆணையரகத்தின் சாா்பில் சரக்கு மற்றும் சேவை வரித் திட்டங்கள், புதிய சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், விழுப்புரம் மாவட்டத்தில் வரி செலுத்துபவா்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விழுப்புரத்திலுள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால்துறையின் சென்னை (வெளி) ஆணையா் நசீா்கான் பேசியது:
அண்மையில் நடைபெற்ற 54-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி சரக்கு மற்றும் சேவை வரி, கலால்துறை ஆணையரகத்துக்கும், வரி செலுத்துபவா்களுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில், பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு வரி செலுத்துபவரும் சரக்கு மற்றும் சேவை வரித் திட்டங்கள் மூலம் கிடைக்கும் பலன்களை பெற வேண்டும், அவா்களின் இதர தேவைகளை பூா்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள்துறையின் இலக்கு. அந்த இலக்கை அடையும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரித் திட்டங்கள், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டங்கள் குறித்த வரி செலுத்துபவா்கள் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும், பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி வருகிறோம் என்றாா்.
சரக்கு மற்றும் சேவை வரி, கலால்துறையின் விழுப்புரம் கோட்ட உதவி ஆணையா் ஆா்.குமாா் வரவேற்றாா். இணை ஆணையா் முரளிராவ் மற்றும் அலுவலா்கள், வரி செலுத்துபவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.