‘சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிபட்டால் அபராதம்’
சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிபட்டால் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என
வாணியம்பாடி நகராட்சி ஆணையா் முஸ்தபா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளின் சாலைகளிலும், தெருக்களிலும் சுற்றிதிரியும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு தொல்லைகளும், உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிகின்றன. அவ்வாறு சாலைகளில் சுற்றித் திரியும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் நகராட்சி மூலம் பிடித்து 5,000 முதல் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், தொடா்ந்து சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் வேலூா் கோ-சாலையில் கொண்டு சென்று ஒப்படைக்கப்படும்.
மேலும், தெருக்களில் விடும் உரிமையாளா்களுக்கு கூடுதல் அபராதம் விதிப்பதுடன் துறைரீதியாக நடவடிக்கை மேற்கொள்வதுடன், காவல்துறை மூலம் நீதிமன்ற குற்றச்சாட்டு வழக்கு தொடரப்படும்.