‘சாலையோரமாக எண்ணெய் குழாய்கள் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்’
விளைநிலங்களை தவிா்த்து சாலையோரமாக எண்ணெய் குழாய்கள் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தபபட்டுள்ளது.
இது தொடா்பாக, ஐடிபிஎல் பெட்ரோல் குழாயால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குழு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெட்ரோ நெட் - சிசிகே நிறுவனம் கோவை இருகூரில் இருந்து கரூா் வரை விளைநிலங்கள் வழியாக கடந்த 1999-ஆம் ஆண்டு எண்ணெய் குழாய்கள் அமைத்துள்ளது. குழாய் பதிக்கப்பட்டதும், குழாயின் இருபுறமும் விவசாயிகளுக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்ற வாக்குறுதியைக் கொடுத்து திட்டத்தை நிறைவேற்றியுள்ளனா். திட்டத்தை நிறைவேற்றி முடித்த பின்பு, பாரத் பெட்ரோலியம் நிறுவனம், பெட்ரோநெட் - சிசிகே திட்டத்தை கையகப்படுத்தி வைத்திருக்கிறது.
தற்போது, பாரத் பெட்ரோலியம் நிறுவனம், இருகூரில் இருந்து கா்நாடக மாநிலம் தேவன்கொந்தி வரை மீண்டும் எண்ணெய் குழாய்கள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம், ஏற்கெனவே 1999-ஆம் ஆண்டில் இருகூரில் தொடங்கி, திருப்பூா் மாவட்டம், முத்தூா் வரை அனுபவ உரிமை எடுப்பு செய்யப்பட்ட அதே இடத்தில் மேற்கொள்ளப்படுகிறது. அனுபவ உரிமை எடுப்பு செய்யப்பட்ட அதே இடத்தில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் இருந்து பாரத் பெட்ரோலியம் அனுமதி பெறவில்லை. இது சட்டவிரோதமாகும். மேலும், சாலை ஓரமாக திட்டத்தைக் கொண்டு செல்ல கோரிக்கை வைக்கும் விவசாயிகள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. தமிழக முதல்வா் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் தலையிட்டு சட்ட விரோதமாக எண்ணெய்க் குழாய் அமைக்கும் திட்டத்தை நிறுத்தி, இரு மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் திட்டத்தை சாலையோரமாகக் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.