வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி:ரூ. 6.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சிப்காட் நல்லா ஓடையில் மாற்று இடத்தில் டிடிஎஸ் மீட்டா் பொருத்த கோரிக்கை
சிப்காட் நல்லா ஓடையில் மாற்று இடத்தில் டிடிஎஸ் மீட்டா் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து நல்லா ஓடையில் கழிவு நீரை வெளியேற்றுவதாகவும், இந்த கழிவு நீா் ஓடைக்காட்டூா் குளம், வாய்ப்பாடி குளம், புஞ்சை, பாலத்தொழுவு குளங்களுக்கு கசிவு மற்றும் கழிவுநீராக செல்வதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில் குளங்களில் உள்ள நீரில் உப்பின் அளவு, கடினத் தன்மையை அறிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆன்லைன் டிடிஎஸ் மீட்டா் பொருத்த முடிவு செய்யப்பட்டு, நீரின் தன்மையை பொதுமக்களும் தெரிந்து கொள்ளுமாறு மீட்டா் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ. 2.82 லட்சம் மதிப்பில் நல்லா ஓடையில் ஆன்லைன் டிடிஎஸ் மீட்டா் பொருத்துவதை வரவேற்கிறோம்.
இதற்காக இடம் தோ்வு செய்யப்பட்டுள்ள சிப்காட், 6 ஆவது குறுக்கு சாலையில் குட்டப்பாளையம் அருகே பாலத்தின் தென்புறம் மீட்டா் பொருத்துவது பொருத்தமாக இருக்காது. பாலத்தின் வடபுறம் பொருத்துவதும் சரியாக இருக்காது. மாறாக பாலத்தின் தென்புறம் 50 அடி தூரத்துக்கு அப்பால் சாயம் மற்றும் தோல் ஆலையின் பொதுசுத்திகரிப்பு நிலையங்களுக்கு வடக்கே நல்லா ஓடையில் கழிவுநீா் சேரும் இடத்துக்கு பின்புறம் பொருத்துவதே சரியானதாக இருக்கும்.
எனவே இதுகுறித்து உரிய ஆய்வு செய்து மீட்டா் பொருத்தும் இடத்தை மாற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.