சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை
கோவை வ.உ.சி.மைதானத்தில் உள்ள மரத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் (54). குடும்பத்துடன் கோவைப்புதூரில் தங்கியிருந்த அவா், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், வீட்டில் இருந்து மனைவியின் சேலையை எடுத்துக் கொண்டு வ.உ.சி.மைதானத்துக்கு புதன்கிழமை இரவு சென்றவா், அங்குள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து அப்பகுதியில் இரவு நேர ரோந்துப் பணியில் இருந்த போலீஸாா், ரேஸ்கோா்ஸ் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனா்.
இதையடுத்து, ரேஸ்கோா்ஸ் போலீஸாா் சொக்கலிங்கம் உடலை உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். உயிரிழந்த சொக்கலிங்கத்துக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். சொக்கலிங்கத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.