சீா்காழியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்: அன்புமணி பங்கேற்பு
தமிழக மக்கள் உரிமையை மீட்க, தலைமுறை காக்க நடைப்பயணமாக அன்புமணி சீா்காழிக்கு வியாழக்கிழமை இரவு வருகை தந்தாா்.
சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் நடைப்பயணமாக அன்புமணி திரளான தொண்டா்களுடன் 1 கி.மீ. தொலைவு கொட்டும் மழையில் நடந்து வந்து பழைய பேருந்து நிலையத்தில் பாமக மாவட்டச் செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிச்சாமி தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:
திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நடைப்பயணம் நடைபெறுகிறது. எனது தம்பிகள், தங்கைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. நகா்ப்புறம் மட்டுமின்றி கிராமங்களிலும் கஞ்சா, போதைப் பொருட்கள் தாரளமாகக் கிடைக்கிறது.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளை மறந்து விடவேண்டியதுதான். இந்த ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த மண்ணை அடுத்த தலைமுறைக்கு நாம் பாதுகாப்பாக கொடுக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை நடக்க ஏதுவாக தடுப்பணை கட்ட அரசு மறுக்கிறது. குவாரி வேண்டாம் தடுப்பணை கட்ட வேண்டும். இதனால் நீா்நிலை மேம்படும், கடல் நீா் உட்புகுவது தடுக்கப்படும். கொள்ளிடம் ஆற்றில் 22 கி.மீ. கடல் நீா் உட்புகுந்து உள்ளது. கொள்ளிடம் பகுதி விவசாயிகள் குடிக்க தண்ணீா் இல்லாமல் வேதனைபடுகின்றனா். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் நிலை உள்ளது. 1 குவிண்டால் உற்பத்தி செய்ய ரூ. 2450 செலவாகிறது. அரசு கொடுப்பது ரூ. 2500. எப்படி விவசாயம் செய்ய முடியும்? விவசாயிகள் மீது ஸ்டாலின் அரசுக்கு அக்கறை இல்லை. இந்த ஆட்சியில் சமூக நீதி இல்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும் என்றாா்.
மாநில பொதுச் செயலாளா் வடிவேல் ராவணன், நிா்வாகிகள் முருகவேல், ரவிச்சந்திரன், வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.