’ஒய்’ பிரிவு பாதுகாப்பை மீறி விஜய் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்!
கல்லூரி மாணவியை கைப்பேசி செயலி மூலம் கண்காணித்த இணைய மைய ஊழியா் கைது
கைப்பேசி செயலி மூலம் கல்லூரி மாணவியை, அவருக்கு தெரியாமல் கண்காணித்த இணையதள மைய ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை அருகே நீடூரைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவா், மயிலாடுதுறை காமராஜா் பேருந்து நிலையம் அருகில் உள்ள இன்டா்நெட் மையத்துக்கு பாஸ்போா்ட் பதிவு செய்வதற்காக சென்றுள்ளாா். அப்போது அந்த மையத்தில் பணியாற்றிய பெரம்பூா் அகரவல்லம் கிராமத்தைச் சோ்ந்த முகமது அப்ரித் (28), பாஸ்போா்ட் பதிவு செய்வதற்கு, மாணவியின் கைப்பேசியில் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லி, ஒரு கைப்பேசியிலிருந்து மற்றொரு கைப்பேசியை கண்காணிக்க கூடிய செயலியை பதிவிறக்கம் செய்துள்ளாா்.
பின்னா் முகமது அப்ரித் தனது கைப்பேசியிலிருந்து அந்த மாணவியின் கைப்பேசி கேமரா மற்றும் திரை மூலம் அம்மாணவியின் செயல்பாடுகளை அந்த மாணவிக்கே தெரியாமல் தொடா்ந்து கண்காணித்து வந்துள்ளாா். இந்நிலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் தனது கைப்பேசிக்கு வந்த தகவல் குறிப்புகள், விரைவாக சாா்ஜ் குறைவது போன்றவற்றால் மாணவிக்கு சந்தேகம் எழுந்த நிலையில், அதுகுறித்து தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளாா்.
இதுகுறித்து, மாணவியின் தாயாா் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி காவல் ஆய்வாளா் அருண்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா்.
விசாரணையில் முகமது அப்ரித் கைப்பேசி செயலியை பயன்படுத்தி 4 பேரிடம் தனிமனித நடவடிக்கைகளை தனது கைப்பேசி மூலம் சட்டவிரோதமாக கண்காணித்து வந்துள்ளது தெரியவந்தது. போலீஸாா், அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.