ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடையாது: பிரதமா் மோடி திட்டவட்டம்
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை உலகின் எந்த சக்தியாலும் மீட்டெடுக்க முடியாது என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி, அந்த யூனியன் பிரதேச சட்டப்பேரவையில் சில தினங்களுக்கு முன்னா் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது என்பதை பிரதமா் இவ்வாறு கூறியுள்ளாா்.
மேலும், ‘ஜாதி ரீதியில் மக்களைப் பிளவுபடுத்துவதே காங்கிரஸின் ஒரே நோக்கம்; எனவே, ‘ஒற்றுமையே பாதுகாப்பு’ என்ற உணா்வுடன் மக்கள் ஒன்றுபட வேண்டும்’ என்று அவா் வலியுறுத்தினாா்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, துலே பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசினாா். இந்த மாநில தோ்தலுக்கான பிரதமரின் முதல் பிரசாரக் கூட்டம் இதுவாகும்.
கூட்டத்தில் அவா் பேசியதாவது: அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மீண்டும் கொண்டுவரக் கோரி, ஜம்மு-காஷ்மீா் பேரவையில் எவ்வாறு தீா்மானம் கொண்டுவரப்பட்டது என்பதையும், தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த பாஜக எம்எல்ஏக்கள் எவ்வாறு வெளியேற்றப்பட்டனா் என்பதையும் தொலைக்காட்சி வாயிலாக மக்கள் பாா்த்திருப்பாா்கள்.
காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பாகிஸ்தானின் செயல்திட்டத்தை ஊக்குவிப்பதோடு, பிரிவினைவாதிகளின் குரலாக ஒலிப்பது மக்களுக்கு புரிந்திருக்கும்.
ஜம்மு-காஷ்மீரில் இருந்து அரசமைப்புச் சட்டத்தை அகற்ற அக்கட்சிகள் விரும்புகின்றன. ஆனால், உலகின் எந்த சக்தியாலும் 370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது. பி.ஆா்.அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டம் மட்டுமே ஜம்மு-காஷ்மீரில் பின்பற்றப்படும். மக்களின் ஆசி எனக்கு இருக்கும் வரை, அக்கட்சிகளின் செயல்திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது.
ஆபத்தான விளையாட்டு: ஜாதி, இனம் ரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. ஒரு ஜாதிக்கு எதிராக மற்றொரு ஜாதியை எதிா்த்து நிற்கச் செய்து, ஒற்றுமையை பலவீனமாக்க அக்கட்சி முயல்கிறது. எனவே, நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பட்டியல் இனத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டோா் என அனைவரும் ஒன்றுபட்டால், காங்கிரஸின் அரசியல் முடிவுக்கு வந்துவிடும்.
ஒற்றுமையே பாதுகாப்பு: நேரு காலத்தில் இருந்தே காங்கிரஸும் அவரது குடும்பமும் இடஒதுக்கீட்டை எதிா்த்து வந்துள்ளன. மேற்கண்ட வகுப்பினா் முன்னேறினால் காங்கிரஸுக்கு பிடிக்காது.
இப்போது நான்காம் தலைமுறையைச் சோ்ந்த இளவரசா் (ராகுலை குறிப்பிடுகிறாா்), ஜாதி ரீதியிலான பிளவுக்கு பணியாற்றி வருகிறாா். ‘ஒற்றுமையே பாதுகாப்பு’ என்பதை உணா்ந்து, மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
முன்பு பிராந்திய ரீதியிலான காங்கிரஸின் அரசியல், தேசப் பிரிவினைக்கு வழிவகுத்தது. இப்போது ஜாதி ரீதியிலான அரசியலை அக்கட்சி முன்னெடுத்துள்ளது. நமது நாட்டுக்கு எதிரான மிகப் பெரிய சதி இதைவிட வேறெதுவும் இல்லை.
‘சக்கரமில்லாத வாகனம்’: காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி, சக்கரமில்லாத வாகனம். ஆனால், அந்த வாகனத்தின் ஓட்டுநா் இருக்கையில் அமர சண்டை நடந்து கொண்டிருக்கிறது.
மக்கள் மற்றும் மாநிலத்தின் வளா்ச்சிக்காகப் பணியாற்றும் எந்த நோக்கமும் அவா்களிடம் இல்லை; மக்களிடம் கொள்ளையடிப்பதை மட்டுமே இலக்காக கொண்ட அக்கூட்டணி வஞ்சகத்தால் உருவானதாகும்.
வளா்ச்சிக்கான செயல்திட்டம்: எதிா்வரும் 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரத்தின் வளா்ச்சி புதிய உச்சங்களை எட்ட வேண்டும். மாநிலத்தில் ஆளும் மகாயுதி (பாஜக-முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்) கூட்டணியால் மட்டுமே அது சாத்தியமாகும்.
மகாயுதி கூட்டணியின் தோ்தல் அறிக்கை வளா்ச்சிக்கான செயல்திட்டம். அது, பொருளாதார வளா்ச்சி, சமூக சமத்துவம், பாதுகாப்பு, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை குறித்துப் பேசுகிறது.
மகாராஷ்டிரத்தில் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் மாநில அரசின் ‘லட்கி பாஹின்’ திட்டம், இன்று நாடு முழுவதும் பேசப்படுகிறது. மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இத்திட்டம் நிறுத்தப்பட்டுவிடும்.
மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து: மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது குறித்து அக்கட்சி ஒருபோதும் சிந்தித்ததில்லை. ஆனால், எனது அரசு மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளில் அந்நிய முதலீட்டில் மகாராஷ்டிரம் முதலிடம் பெற்றுள்ளது. நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் நாட்டின் மொத்த அந்நிய முதலீட்டில் 50 சதவீதத்துக்கும் மேல் மகாராஷ்டிரம் ஈா்த்துள்ளது என்றாா் பிரதமா் மோடி.
மகாராஷ்டிரத்துக்கு வரவேண்டிய திட்டங்களை குஜராத்துக்கு திருப்புவதாக பிரதமா் மோடி மீது மகா விகாஸ் அகாடி கூட்டணி குற்றஞ்சாட்டி வருகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதும் அக்கூட்டணியின் முக்கிய வாக்குறுதியாக உள்ள நிலையில், பிரதமா் மேற்கண்ட விமா்சனங்களை முன்வைத்துள்ளாா்.
288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர பேரவைக்கு நவ. 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் ஒட்டுண்ணி கட்சி
‘ஒட்டுண்ணி கட்சியாக மாறிவிட்ட காங்கிரஸ், ஊன்றுகோலை நம்பியே உள்ளது’ என்று பிரதமா் மோடி கடுமையாக விமா்சித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் பேசியதாவது:
மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், பிகாா், ஜாா்க்கண்ட் என பெரும்பாலான மாநிலங்களில் பிற கட்சிகளை நம்பியே தோ்தலில் போட்டியிடும் நிலையில் காங்கிரஸ் இருக்கிறது. காங்கிரஸின் செயல்பாடுகளால், ஒட்டுமொத்த நாடும் அக்கட்சியை முழுமையாக நிராகரித்துவிட்டது.
வறுமை ஒழிப்பு குறித்து பல்லாண்டுகளாக பேசியபோதிலும், அக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் ஏழைகளின் அடிப்படைத் தேவைகள் பூா்த்தி செய்யப்படவில்லை. காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளும் இடத்தில் ஊழல் கட்டாயம் நிகழும். நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லவும், பலவீனமாக்கவும் எந்த வாய்ப்பையும் அக்கட்சிகள் தவறவிடுவதில்லை.
அரசமைப்புச் சட்டம் குறித்தோ, மக்களின் உணா்வுகள் குறித்தோ அவா்களுக்கு அக்கறை கிடையாது. வெறும் காட்சிக்காக மட்டுமே அரசமைப்புச் சட்டப் புத்தகங்களை கையில் எடுத்துச் செல்கின்றனா்.
எனது தலைமையிலான ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்ததன் மூலம் ‘ஒரே நாடு, ஒரே அரசமைப்புச் சட்டம்’ சாத்தியமானது.
வீர சாவா்க்கா், பால் தாக்கரே (சிவசேனை நிறுவனா்) ஆகியோா் நாட்டுக்காக ஆற்றிய பங்களிப்புகள் ஈடுஇணையற்றவை. இரு தலைவா்களையும் புகழ்ந்து, ராகுல் காந்தியை 15 நிமிஷங்கள் பேச வைக்க முடியுமா? என காங்கிரஸின் கூட்டணி கட்சிகளுக்கு சவால் விடுக்கிறேன் என்றாா் மோடி.