பஞ்சாங்கக் குறிப்புகள் - நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை #VikatanPhotoCards
பல்லடம் அருகே வேலம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பல்லடம் அருகே வேலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியை விவசாயிகள், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வழியாக தாராபுரம்- மதுரை- கன்னியாகுமரி வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டது. இதில் பொங்கலூா் ஒன்றியம், வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி, வேலம்பட்டி பகுதியில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டது. நீா்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடியை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையே வேலம்பட்டி பகுதியில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் சுங்கச்சாவடி செயல்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சுங்கசாவடியில் புதன்கிழமை (நவம்பா் 13) அதிகாலை முதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வேலம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிா்ப்பு இயக்கத்தினா் தலைமையில் பொதுமக்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் மயில்சாமி, பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் சமாதானம் அடையாத பொதுமக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மாலை 4 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவும் தொடா்ந்தது. போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.