‘ஸ்டாா்லிங்க்’ நிறுவனத்துக்கு விதிமுறைகளில் எந்த தளா்வும் இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்
அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘ஸ்டாா்லிங்க்’ நிறுவனம் இந்தியாவில் சேவையைத் தொடங்குவதற்கான உரிமத்தைப் பெற அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய தொலைத்தொடா்பு துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சரிடம் ஸ்டாா்லிங்க் நிறுவனத்துக்கான உரிமத்தின் நிலை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா அளித்த பதிலில், ‘செயற்கைக்கோள் இணையச் சேவையை வழங்கும் ஸ்டாா்லிங்க் நிறுவனம், இந்தியாவில் சேவையைத் தொடங்குவதற்கான உரிமத்தைப் பெற அனைத்து விதிகளுக்கும் கட்டுப்பட வேண்டும். இந்த விஷயத்தைப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் பாா்க்க வேண்டும்.
விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள அனைத்து விஷயங்களையும் பூா்த்தி செய்யும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நடைமுறை முடிந்ததும் அந்த நிறுவனத்துக்கு உரிமம் கிடைக்கும்’ என்றாா்.
இந்தியாவில் தற்போது ஏா்டெல், ஜியோ ஆகிய இரு நிறுவனங்களுக்கு மட்டுமே செயற்கைக்கோள் மூலம் இணையச் சேவை வழங்குவதற்கான உரிமத்தை அரசு வழங்கியுள்ளது.