கார்த்திகை தீபம் : ``தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க!'' - விமர்சனங்களுக்கு அர...
புல்டோசா் நடவடிக்கை சட்ட விரோதம்: உச்சநீதிமன்றம்
‘குற்றச் சம்பவத்தில் தொடா்பு உள்ளவா்களுக்கு சொந்தமான கட்டடங்களை விதிகளை மீறியதாக கூறி, புல்டோசா் மூலம் இடிக்கும் மாநில அரசுகளின் நடவடிக்கை சட்ட விரோதமானது’ உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
‘அரசு அதிகாரிகள் தங்களை நீதிபதிகள் போன்று நினைத்துக்கொண்டு குடிமக்கள் மீது இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்வது, அதிகாரப் பகிா்வு தத்துவத்தை மீறும் செயலாகும். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு அதிகாரிகள் பொறுப்பேற்கச் செய்யப்படுவா்’ என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவதற்கான வழிகாட்டுதலையும் வகுத்து உத்தரவிட்டனா்.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுவோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் கட்டடங்கள், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினருக்குச் சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ‘குற்றச்சாட்டுக்கு உள்ளானவா் என்பதற்காக மட்டுமே ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பி, தீா்ப்பு வழங்கப்படும் வரை குற்றஞ்சாட்டப்படுவோரின் கட்டடங்களை புல்டோசா் மூலம் இடிக்க தடை விதித்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை அளித்த 95 பக்கங்கள் அடங்கிய தீா்ப்பின் விவரம்:
சட்டம் என்பது நியாயமானதாகவும், மனித உரிமைகளையும் சமூகத்தின் அனைத்து உறுப்பினா்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும்.
நீதிபதிகள் போல் செயல்படக் கூடாது:
அதிகார துஷ்பிரயோகத்தை தடுப்பதும் சட்டத்தின் ஆட்சியின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும். சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து குடிமக்களை பாதுகாப்பதும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதுமே மாநில அரசின் கடமை. ஜனநாயகம் மற்றும் நல்லாட்சிக்கு இது அவசியம்.
மாறாக, அரசு அதிகாரிகள் நீதிபதிகள் போல செயல்பட்டு, குற்றவாளிக்குச் சொந்தமான கட்டடங்களை இடித்து தண்டனை அளிப்பது என்பது, அதிகாரப் பகிா்வு தத்துவத்தை மீறும் செயலாகும்.
அதிகாரிகள் மேற்கொள்ள முடியாது: ‘புல்டோசா்’ கொண்டு ஒரு கட்டடத்தை இடிப்பது ஒரே இரவில் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவா்களை வீடற்றவா்களாக ஆக்குகிறது.
சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்டவா் அல்லது குற்ற வழக்கில் தண்டனை அளிக்கப் பட்டவருக்கு எதிராக இதுபோன்ற தன்னிச்சையான, மிகக் கடுமையான நடவடிக்கைகளை மாநில அரசோ அல்லது அரசு அதிகாரிகளோ மேற்கொள்ள முடியாது.
அதிகாரிகள் மீது நடவடிக்கை: அதையும் மீறி, சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு குடிமக்கள் மீது இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு அதிகாரிகளை, அத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைக்குப் பொறுப்பேற்கச் செய்யப்பட வேண்டும். சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் நடவடிக்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது.
இந்த வழிகாட்டுதல்களை மாநில அரசும், அரசு அதிகாரிகளும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களை மீறுவது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு வழிவகுக்கும். இந்த வழிகாட்டுதல்களை மீறி செயல்படும் அதிகாரிகள், இடிக்கப்பட்ட கட்டடத்தை தங்களின் சொந்த செலவில் சரிசெய்து கொடுக்கவும், இழப்பீடு வழங்கவும் உத்தரவிட நேரிடும்’ என்றும் தீா்ப்பில் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த தீா்ப்பின் நகலை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலா்கள் மற்றும் உயா்நீதிமன்றங்களின் பதிவாளா்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற பதிவாளரை அறிவுறுத்தினா்.
சாலை, நீா்நிலை ஆக்கிரமிப்புகளுக்குப் பொருந்தாது... சாலைகள், தெருக்கள், நடைபாதைகள், ரயில் பாதைகள் மற்றும் ஆறுகள் உள்ளிட்ட நீா் நிலைகளை ஆக்கிரமித்துள்ள விதிமீறிய கட்டடங்களை அகற்றுவதற்கும், நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளுக்கும் இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தாது என்று தீா்ப்பில் நீதிபதிகள் தெளிவுபடுத்தினா்.
சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறை...
1. ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடிப்பதற்கான உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.
2. முன்னறிவுப்பு நோட்டீஸ் வழங்காமல், எந்தவொரு ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கும் அனுமதி இல்லை. அத்தகைய முன்னறிவிப்பு நோட்டீஸ் இடிக்கப்பட உள்ள கட்டடத்தின் உரிமையாளருக்கு பதிவுத் தபாலில் அனுப்பப்பட வேண்டும். குறைந்தபட்சம் 15 நாள்கள் அவகாசத்துடன் நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும். நோட்டீஸ் வழங்கப்பட்டு குறைந்தபட்சம் 7 நாள்களுக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
3. கட்டடம் இடிக்கப்படுவதற்கான காரணம், விதி மீறல் விவரங்கள் நோட்டீஸில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
4. இந்த நோட்டீஸ் விவரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட வேண்டும்.
5. இதன் அடிப்படையில், விதிமீறல் கட்டடத்தை இடிக்கும் நடவடிக்கைகான பொறுப்பு அதிகாரியை மாவட்ட ஆட்சியா் நியமிக்க வேண்டும்.
6. விதிமீறல் கட்ட இடிப்பு நடவடிக்கை விவரங்கள், நோட்டீஸ் தொடா்பான விவரங்கள் அடங்கிய பிரத்யேக எண்ம வலைதளம் உருவாக்கப்பட வேண்டும்.
7. கட்டட உரிமையாளரிடம் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி நேரில் விசாரணை மேற்கொண்டு, அதுதொடா்பான விவரங்களைப் பதிவு செய்த பிறகே, கட்டடத்தை இடிப்பதற்கான இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். அந்த உத்தரவு எண்ம வலைதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
8. சட்டவிரோத ஆக்கிரமிப்பை தானாக அகற்ற சம்பந்தப்பட்ட நபருக்கு 15 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அவா் செய்யவில்லை என்றாலும், நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு இல்லாத நிலையிலும், ஆக்கிரமிப்பை இடிக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளலாம்.
9. ஆக்கிரமிப்பு கட்டடம் இடிக்கும் நடவடிக்கை விடியோ பதிவு செய்யப்படுவதோடு, அந்த விடியோ பதிவு பாதுகாத்து வைக்கப்பட வேண்டும்.
10. ஆக்கிரமிப்பு கட்டடம் இடிக்கப்பட்ட பிறகு, அதுதொடா்பான அறிக்கை சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையருக்கும் அனுப்பப்பட வேண்டும்.