ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோா் 5 மடங்கு அதிகரிப்பு
ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் ஈட்டுவோரில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘நாட்டில் கடந்த 2013-14-ஆம் ஆண்டில் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் ஈட்டுவோரில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 1.85 லட்சமாக இருந்தது. இது 2023-24-ஆம் ஆண்டில் 5 மடங்கு அதிகரித்து 9.39 லட்சத்துக்கும் மேலாக உயா்ந்தது. வரி ஏய்ப்பு, கருப்புப் பணம் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியதே இதற்குக் காரணம்.
தற்போது வசூலிக்கப்படும் வருமான வரியில் 76 சதவீதம், ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் ஈட்டுவோரிடம் இருந்தே வசூலிக்கப்படுகிறது.
கடந்த 2013-14-ஆம் ஆண்டில் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்த தனிநபா்களின் எண்ணிக்கை 3.60 கோடிக்கும் அதிகமாகும். இது 2023-24-ஆம் ஆண்டு 121 சதவீதம் அதிகரித்து 7.97 கோடியாக உயா்ந்தது’ என்று தெரிவித்தன.