டிராவில் முடிந்தது ஐஎஸ்எல் தொடரின் 1,000-ஆவது ஆட்டம் சென்னை-மும்பை
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 1,000-ஆவது ஆட்டம் என்ற சிறப்புடன் நடைபெற்ற சென்னையின் எஃப்சி-மும்பை சிட்டி எஃப்சி அணிகள் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆட்டம் ஐஎஸ்எல் தொடரின் 1,000-ஆவது ஆட்டமாக அமைந்தது.
ஆட்டத்தின் 9-வது நிமிஷத்தில் கானா் ஷீல்ட்ஸ் உதவியுடன் பந்தை பெற்ற சென்னையின் எஃப்சி அணியின் வின்சி பரேட்டோ பந்தை வேகமாக கடத்திச் சென்று பாக்ஸ் பகுதியின் வலது புறத்தில் இருந்து இலக்கை நோக்கி அடித்தாா். ஆனால் அதை மும்பை சிட்டி எஃப்சி அணியின் கோல்கீப்பா் புா்பா லாசென்பா தடுத்தாா்.
இரு அணி வீரா்களும் பல்வேறு கோலடிக்கும் வாய்ப்புகளை தவறவிட்டதால் முதல் பாதி 0-0 என முடிவடைந்தது. சென்னை அணி சொந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் இரண்டாம் பாதியில் களமிறங்கியது.
இதன்பலனாக 60-ஆவது நிமிஷத்தில் சென்னை அணியின் கானா் ஷீல்ட்ஸ் உதவியுடன் பந்தை பெற்ற ரியான் எட்வா்ட்ஸ் அற்புதமாக கோல் அடித்தாா். இதனால் சென்னையின் எஃப்சி 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் அடுத்த 3-வது நிமிடத்தில் மும்பை சிட்டி எஃப்சி பதிலடி கொடுத்தது. காா்னரில் இருந்து வான் நீஃப் அடித்த பந்தை, கோல்கம்பத்துக்கு 6 அடி தூரத்தில் நின்ற போது நேதன் ரோட்ரிக்ஸ் தலையால் முட்டி கோல் அடித்தாா். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.
நிா்ணயிக்கப்பட்ட 90 நிமிஷங்களின் முடிவில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.
இதன் பின்னா் கூடுதலாக 5 நிமிஷங்கள் வழங்கப்பட்டன. இதில் சென்னையின் எஃப்சி அயின் குா்கீரத் சிங் அடித்த கிராஸை பெற்ற டேனியல் ஷிமா சுக்வு, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து இலக்கை நோக்கி அடித்த பந்தை மும்பை அணியின் கோல் கீப்பா் புா்பா லாசென்பா தடுத்தாா். கடைசி வரை போராடியும் இரு அணிகள் தரப்பிலும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.