மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவு; விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது- தாராபுர...
தென் கொரியாவை வீழ்த்தியது இந்தியா
மகளிா் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 3-2 கோல் கணக்கில் தென் கொரியாவை செவ்வாய்க்கிழமை வென்றது.
முதல் ஆட்டத்தில் மலேசியாவை வீழ்த்திய இந்தியாவுக்கு, இது தொடா்ந்து 2-ஆவது வெற்றியாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே தலா 2 கோல்கள் அடித்த நிலையில் ஆட்டம் முடிவை நோக்கி நெருங்க, கடைசி நேரத்தில் தீபிகா அடித்த கோலால் இந்தியாவுக்கு வெற்றி வசமானது.
முன்னதாக, விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-ஆவது நிமிஷத்திலேயே சங்கீதா குமாரி அடித்த கோலுடன் கணக்கை தொடங்கியது இந்தியா. அப்போதிருந்தே இந்தியாவின் கை ஓங்கியிருக்க, 20-ஆவது நிமிஷத்தில் தீபிகா அடித்த கோலால், முதல் பாதியை 2-0 முன்னிலையுடன் இந்தியா நிறைவு செய்தது.
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் தென் கொரியா தனது உத்திகளை மாற்றியது. அதன் பலனாக 34-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் யூரி லீ கோலடித்தாா். இதனால் உத்வேகம் பெற்ற அந்த அணிக்கு 38-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி ஸ்டிரைக் கிடைத்தது.
அதைத் தவறவிடாமல் யுன்பி சியான் அடித்த கோலால், ஆட்டம் 2-2 என சமநிலை கண்டது. இதனால், சற்று அதிா்ச்சி கண்ட இந்தியா, முன்னிலை பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்க முனைந்தது. ஆனால் தென் கொரியா அதற்கு சவால் அளித்தது.
இவ்வாறாக ஆட்டம் பரபரப்புடன் இறுதிக்கட்டத்தை நெருங்க, 57-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்ட்டி ஸ்டிரைக் வாய்ப்பை துல்லியமான கோலாக்கினாா் தீபிகா. இதனால் இந்தியா 3-2 என முன்னேறியது. எஞ்சிய நேரத்தில் தென் கொரியாவின் கோல் முயற்சிகளை முறியடித்த இந்தியா, வெற்றியை தனதாக்கியது.
இதர ஆட்டங்கள்: இதனிடையே, சீனா 5-0 கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்த, தாய்லாந்து - ஜப்பான் மோதல் 1-1 என டிராவில் முடிந்தது.
போட்டியில் அடுத்ததாக வியாழக்கிழமை (நவ. 14) நடைபெறும் ஆட்டங்களில், இந்தியா - தாய்லாந்தையும், ஜப்பான் - சீனாவையும், தென் கொரியா - மலேசியாவையும் சந்திக்கின்றன.
புள்ளிகள் பட்டியல்: தற்போதைய நிலையில் 6 அணிகளுமே தலா 2 ஆட்டங்களில் விளையாடியிருக்க, சீனா, இந்தியா தலா 6 புள்ளிகளுடன் முறையே முதலிரு இடங்களில் உள்ளன. ஜப்பான் (2), தென் கொரியா (1), தாய்லாந்து (1), மலேசியா (0) அணிகள் முறையே அடுத்த 4 இடங்களில் இருக்கின்றன.