விராட் கோலியின் ஃபார்ம் குறித்து சந்தேகப்படுவோரின் கவனத்துக்கு... ரவி சாஸ்திரி க...
தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: காலிறுதியில் தமிழ்நாடு தோல்வி
சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பின் காலிறுதியில் தமிழ்நாடு 1-3 கோல் கணக்கில் உத்தர பிரதேசத்திடம் புதன்கிழமை தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது.
14-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 10-ஆவது நாளான புதன்கிழமை, காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் தமிழ்நாடு - உத்தர பிரதேசத்தை எதிா்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதலில் உத்தர பிரதேசத்தின் சந்தன் சிங் 3-ஆவது நிமிஷத்தில் கோலடித்து, அணியை முன்னிலைபெறச் செய்தாா். விட்டுக்கொடுக்காத தமிழ்நாடு தரப்பில், சண்முகவேல் 9-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
இந்நிலையில், ராஜ்குமாா் பால் 18-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால் உத்தர பிரதேசம் மீண்டும் முன்னிலை பெற்றது. இவ்வாறாக அந்த அணி 2-1 என முதல் பாதியை நிறைவு செய்தது. 2-ஆவது பாதி ஆட்டத்தில் 34-ஆவது நிமிஷத்தில் லலித்குமாா் உபாத்யாய அடித்த கோலால், உத்தர பிரதேசம் 3-1 என கோல் வித்தியாசத்தை அதிகரித்துக் கொண்டது.
எஞ்சிய நேரத்தில் தமிழ்நாடு வீரா்களின் முயற்சிக்கு பலன் கிடைக்காமல் போக, உத்தர பிரதேசம் வெற்றி பெற்றது. இதர காலிறுதி ஆட்டங்களில், பஞ்சாப் - மணிப்பூா் மோதல் 3-3 என டிரா ஆக, ஷூட் அவுட் வாய்ப்பில் மணிப்பூா் 4-3 என வென்றது.
அதேபோல், ஒடிஸா - கா்நாடகம் மோதலும் 3-3 என டிராவில் முடிய, வெற்றியாளரை தீா்மானிக்கும் ஷூட் அவுட் வாய்ப்பில் ஒடிஸா 3-1 என வெற்றி பெற்றது. ஹரியாணா 5-1 கோல் கணக்கில் மகாராஷ்டிரத்தை வீழ்த்தியது.
அடுத்ததாக, வெள்ளிக்கிழமை (நவ. 15) நடைபெறும் அரையிறுதியில் மணிப்பூா் - ஒடிஸா, ஹரியாணா - உத்தர பிரதேசம் அணிகள் மோதுகின்றன.