வினிசியஸுக்கு தகுதியில்லை..! பேலன் தோர் விருதுபெற்ற ரோட்ரி கருத்து!
மான்செஸ்டர் சிட்டி அணியின் மிட் ஃபீல்டர் ரோட்ரி இந்தாண்டுக்கான பேலன் தோர் விருதினை (தங்கப் பந்து) வென்றார்.
கால்பந்து உலகில் மிகவும் மதிப்புமிக்க விருதாக இந்த விருது கருதப்படுகிறது. இந்தமுறை ரியல் மாட்ரிட் அணியின் ஃபார்வேட் வீரர் வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்குமென பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில் கடைசியில் அவருக்கு இல்லையென தகவல் வெளியானது.
அதனால் இந்த விருது விழாவினை ரியல் மாட்ரிட் அணியினர் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
2023-24 சீசனில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு உலகின் சிறந்த வீரராக பேலன் தோர் விருதினை பிரான்ஸ் ஃபுட்பால் என்கிற பத்திரிகை சார்பில் 1956 முதல் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
இந்த விருதினைப் பெற்ற ரோட்ரி கூறியதாவது:
கோப்பை வழங்குவதற்கு முன்புவரை நான் அவநம்பிக்கையில்தான் இருந்தேன். அங்கிருந்த மக்களில் பெரும்பாலானோர் வினிசியஸ், வினிசியஸ் எனக் கத்தினார்கள். பின்னர் விருதுக்குப் பின்னர் அனைவரும் எழுந்து நின்று எனக்கு மரியாதைக் கொடுத்தார்கள்.
கால்பந்தில் பேலன் தோர் (தங்கப் பந்து) விருது மிகவும் மதிப்புமிக்கது. தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இந்த விருதுக்கு நான் தகுதியானவரா என நான் கூற முடியாது. 2023ஆம் ஆண்டில் நான் சிறப்பாக விளையாடினேன். தற்போது அதைவிடவும் சிறப்பாக விளையாடி வருகிறேன்.
வினிசியஸுக்கு தகுதியில்லை
இந்த வெற்றிக்குப் பிறகு எனது வாழ்க்கையில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. பலரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ஆண்ட்ரூஸ் இனிஸ்டா வாழ்த்து தெரிவித்தார். எங்களது நாட்டின் சிறப்பான வீரரான அவர் நிச்சயமாக இந்த விருதினை வென்றிருக்க வேண்டும்.
நான் வினிசியஸை 3ஆவதாகத்தான் தேர்வு செய்வேன். அவரை விடவும் கார்வாஜலை 2ஆம் இடத்துக்கு தேர்வு செய்வேன். ரியல் மாட்ரிட் பங்கேற்காதது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இது என்னுடைய தருணம். எனது குடும்பத்தினர் வந்திருந்தார்கள். விழாவுக்கு வராதவர்களைப் பற்றி நான் ஏன் சிந்திக்க வேண்டும்.
ரியல் மாட்ரிட் குறித்து கவலையில்லை
ரியல் மாட்ரிட் அணியில் இருந்து எனக்கு எந்த வாழ்த்தும் வரவில்லை. சிலர் என்னுடம் ஓய்வறைகளை செலவளித்துள்ளார்கள் அவர்களும் வாழ்த்து சொல்லவில்லை. வினிசியஸ் எனக்கு வாழ்த்து சொல்லவில்லை என்பதை நான் கண்டுக்கொள்ளவில்லை. நான் என்னுடைய குடும்பத்தையும் எனது கிளப் அணியினரை மட்டுமே கவனித்தேன். காலாவில் ரியல் மாட்ரிட் செய்ததை நான் செய்யவில்லை. அதைப் பற்றி நான் சிந்திக்க விரும்பவில்லை என்றார்.
காயத்துடனே விருது வாங்கிய ரோட்ரி ஆங்கில சாம்பியன்ஸ் போட்டியில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது. செப்டம்பரில் பிரீமியர் லீக் போட்டியில் அர்செனலுக்கு எதிரான ஆட்டத்தில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது