கேப்டன் எம்பாப்பே பிரான்ஸில் விளையாடாதது ஏன்? மேலாளர் விளக்கம்!
பிரான்ஸை சேர்ந்த 25 வயதான கால்பந்தாட்ட வீரர் கிளியன் எம்பாப்பே இதுவரை 339 கோல்களை அடித்துள்ளார். 160 கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளார்.
1966-ல் இங்கிலாந்தின் ஜெஃப் ஹர்ஸ்ட் உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். அதற்கடுத்ததாக பிரான்ஸின் எம்பாப்பே கடந்த 2022 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் கோல்களை அடித்து அசத்தினார்.
வேறு எந்த வீரரை விடவும் உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் அதிக கோல்கள் (4 கோல்கள்) அடித்தவர் என்ற சாதனையை எம்பாப்பே நிகழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ரியல் மாட்ரிட் அணியில் எம்பாப்பே விளையாடி வருகிறார். சமீபத்திய போட்டிகளில் கோல்கள் அடிக்க தடுமாறி வருகிறார். அணியில் வினிசியஸ் ஜூனியர் சிறப்பாக விளையாடுவதாலும் புதிய அணி என்பதாலும் தடுமாறி வருவதாக கால்பந்து வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
2026ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க:வினிசியஸுக்கு தகுதியில்லை..! பேலன் தோர் விருதுபெற்ற ரோட்ரி கருத்து!
பிரான்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் கிளியன் எம்பாப்பே-க்கும் அணியின் மேலாளர் தேஷாம்ஸுக்கும் இடையே கருத்து மோதல் எனக் கூறப்பட்ட வந்த நிலையில் எம்பாப்வே இல்லாமால் பிரான்ஸ் அணி தகுதிச் சுற்று போட்டிகளை விளையாடி வருகிறது.
பிரான்ஸ் தேசிய அணிக்காக 48கோல்கள் அடித்துள்ள எம்பாப்பே இல்லாமல் கடைசியாக பெல்ஜியத்துடன் 2-0 என வென்றது.
இந்நிலையில் எம்பாப்பே பங்கேற்காதது குறித்து அணியின் மேலாளர் கூறியதாவது:
நான் பலமுறை இது குறித்து எம்பாப்பேவுடன் பேசிவிட்டேன். நன்றாக சிந்தித்து இந்த முடிவினை எடுத்தேன். நான் இதுகுறித்து விவாதிக்க விரும்பவில்லை. மக்கள் மகிழ்ச்சியாக நான் அணியை தேர்வு செய்ய முடியாது. கடினமான முடிவாக இருந்தாலும் நான் இதை செய்தாக வேண்டும். முடிவு எடுப்பது எனது கடமை. மேலாளரின் முடிவுதான் இதற்கெல்லாம் காரணம் என்பது தவறான செய்தி.
ஆனால், முக்கியமான விஷயம் என்னவென்றால் கால்பந்து விளையாடுவதின் மகிழ்ச்சியை எம்பாப்வே மீண்டும் கண்டறிய வேண்டும். மற்றவை தானாக நடைபெறும்.
இதையும் படிக்க: 1,000 கோல்கள் அடிப்பது சந்தேகமே..! மனம் திறந்த ரொனால்டோ!
நாளை போட்டி இருக்கிறது. 23 வீரர்கள் இருக்கிறார்கள். எம்பாப்பே இல்லை. அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள் என்றார்.
சில மாதங்களாக எம்பாப்பே மன உளைச்சலில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.