கார்த்திகை முதல் நாள் காவிரி நீராடலுக்கு இவ்வளவு சிறப்புகளா?கஷ்டங்கள் நீக்கும் த...
மணிப்பூரில் மீண்டும் ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டம் அமல்
மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜிரிபாம் மாவட்ட காவல் நிலையம் உள்பட 6 காவல் நிலைய பகுதிகளில் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை மத்திய அரசு மீண்டும் வியாழக்கிழமை அமல்படுத்தியது.
முன்னதாக கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியது. இருப்பினும், இந்த குறிப்பிட்ட 6 காவல் நிலைய பகுதிகள் உள்பட 19 பகுதிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்மையில், ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் சிஆா்பிஎஃப் வீரா்கள் இருவா் காயமடைந்தனா்.
அதே மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 6 போ் செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டனா்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘தொடா் வன்முறை சம்பவங்கள் காரணமாக, மேற்கு இம்பால் மாவட்டத்தில் செக்மாய் மற்றும் லாம்சங், கிழக்கு இம்பால் மாவட்டத்தில் லாம்லாய், ஜிரிபாம் மாவட்டத்தில் ஜிரிபாம் நகா், காங்போக்பியில் லீமாகோங் மற்றும் பிஷ்ணுபூரில் மொய்ராங் ஆகிய காவல் நிலையப் பகுதிகளில் மீண்டும் ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது’ என குறிப்பிட்டுள்ளது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.
ஆயுதங்கள் பறிமுதல்: மணிப்பூரின் ஜிரிபாம் மற்றும் சுராசந்த்பூா் மாவட்டங்களில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப் படையினா் கைப்பற்றியுள்ளனா்.
இது தொடா்பாக காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஜிரிபாம் மாவட்டத்தின் சம்பாநகா், நாராயண்பூா் மற்றும் தங்போபுஞ்ச்ரே பகுதிகளை சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டதில், மோா்டாா் துப்பாக்கி, 36 தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
சுராசந்த்பூா் மாவட்டத்தில் உள்ள எச் கோட்லியான் கிராமத்தில் நடைபெற்ற சோதனையில், ஒரு ரைஃபில் துப்பாக்கி, ஒரு 9 மி.மீ. கைதுப்பாக்கி, இரண்டு குறுகிய தூர உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பீரங்கி, இரண்டு நீண்ட தூர உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பீரங்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கைபற்றப்பட்டன’ என குறிப்பிட்டிருந்தது.