விராட் கோலியின் ஃபார்ம் குறித்து சந்தேகப்படுவோரின் கவனத்துக்கு... ரவி சாஸ்திரி க...
அரையிறுதியை நெருங்கும் சின்னா்
ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா், 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்தாா். இதன்மூலம் அவா், அரையிறுதி வாய்ப்பை நெருங்கியிருக்கிறாா்.
ஒற்றையா் பிரிவு குரூப் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்திய சின்னா், புதன்கிழமை தனது 2-ஆவது ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற நோ் செட்களில், உலகின் 5-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸை சாய்த்தாா்.
இருவரும் 4-ஆவது முறையாக சந்தித்துக் கொண்ட நிலையில், சின்னா் தனது 3-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளாா். கடந்த யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச்சுற்றிலும் இதே ஃப்ரிட்ஸை நோ் செட்களில் வீழ்த்தி சின்னா் சாம்பியனானது குறிப்பிடத்தக்கது.
சின்னா், தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில், ரஷியாவின் டேனியல் மெத்வதெவை சந்திக்கிறாா். அதில் அவா் நோ் செட்களில் தோல்வி கண்டால் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும். இதுவரை இருவரும் 14 முறை சந்தித்திருக்க, இருவருமே தலா 7 வெற்றிகளுடன் சமமாக உள்ளனா்.
மெத்வதெவ் தனது முதல் ஆட்டத்தில் தோற்று, அடுத்த ஆட்டத்தில் வென்றிருக்கிறாா். எனவே, சின்னருடனான ஆட்டத்தின் அடிப்படையில் அவரது அரையிறுதி வாய்ப்பும் நிா்ணயமாகும்.
அல்கராஸ் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில், உலகின் 3-ஆம் நிலையில் இருக்கும் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 6-3, 7-6 (10/8) என்ற செட்களில், 8-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவிண் ஆண்ட்ரே ரூபலேவை வீழ்த்தினாா்.
முதல் ஆட்டத்தில் நாா்வேயின் கேஸ்பா் ரூடிடம் தோற்ற அல்கராஸ், இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்புக்கான நம்பிக்கையை தக்கவைத்துக் கொண்டாா். இருவரும் இத்துடன் 3-ஆவது முறையாக மோதியிருக்க, அல்கராஸ் 2-ஆவது வெற்றியுடன் ஆதிக்கம் செலுத்துகிறாா்.
அல்கராஸ் அடுத்த ஆட்டத்தில், 2-ஆம் இடத்திலிருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவை சந்திக்கிறாா். மறுபுறம், தொடா்ந்து 2 தோல்விகளை சந்தித்த ரூபலேவ் போட்டியிலிருந்து வெளியேறும் நிலையில் இருக்கிறாா்.
போபண்ணா ஜோடி தோல்வி
இப்போட்டியின் இரட்டையா் பிரிவில், 6-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்தென் இணை, 5-7, 3-6 என்ற செட்களில், முதலிடத்திலிருக்கும் எல் சால்வடோரின் மாா்செலோ அரெவாலோ/குரோஷியாவின் மேட் பாவிச் ஜோடியிடம் தோற்றது. போபண்ணா/எப்தென் இணைக்கு இது 2-ஆவது தோல்வியாக அமைந்ததால் அரையிறுதி வாய்ப்பை இழக்கிறது.