இளைஞா்களின் தொழில் திட்டங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டும்: விழுப்புரம் ஆட்ச...
தன்னைத் தானே கடத்திக்கொள்ள திட்டமிட்ட நபர் கொலை! நண்பர்கள் கைது!
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தன்னைத்தானே கடத்திக்கொள்ள திட்டமிட்ட நபரை பணத்திற்காக கொலை செய்த நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
மயூர்பஞ்சின் நதிக்கரையோரமாக பாதி எரிந்த நிலையில் ஒரு இளைஞரின் உடல் கிடப்பதாக கடந்த செவ்வாயன்று (டிச.24) காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த உடலை கைப்பற்றிய போலீஸார், அந்த உடல் யாருடையது என்று தங்களது விசாரணையை தொடங்கினர்.
அப்போது, அந்த நபரின் சட்டைப் பாக்கெட்டில் ஒரு காகிதத்தில் சில செல்போன் எண்கள் எழுதப்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இந்நிலையில், புவனேஷ்வர் மாவட்டதிலுள்ள காரவெலா நகர் காவல் நிலையத்தில், கேந்திரப்பரா மாவட்டம் ஹிந்துளியா கிராமத்தைச் சேர்ந்த சந்தன் குமார் ஸ்வைன் (வயது-32) என்பவர் கடத்தப்பட்டதாக அவரது உறவினர்கள் புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது.
இந்த இரண்டு தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மீட்கப்பட்ட உடல் சந்தன் குமாருடையது தான் என்பது உறுதிசெய்யப்பட்டது. இதன்பின்னர் அந்த செல்போன் எண்களை சோதனை செய்ததில் பாலாசோர் பகுதியைச் சேர்ந்த ஆஷிஷ் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அம்மாநில காவல்துறையினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்தது.
இதையும் படிக்க: ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கிற்கு இறுதிச்சடங்கு!
பலியான சந்தன் குமார் அவரது தாய் மாமாவான பசிந்தர் ஸ்வைன் என்பவருக்குச் சொந்தமான துணி உற்பத்தி ஆலையில் மேற்பார்வையாளராக வேலைச் செய்து வந்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரது தனது வேலையை ராஜிநாமா செய்து விட்டு கடந்த டிச.17 அன்று புவனேஷ்வர் மாவட்டத்திற்கு வந்துள்ளார்.
இவர் தனியாகத் தொழில் துவங்க பணம் தேவைப்பட்டதினால், தன்னைத் தானே கடத்திக்கொண்டு தனது தாய்மாமாவிடம் ரூ. 50 லட்சம் பணம் கேட்டு மிரட்ட திட்டமிட்டுள்ளார்.
இந்த திட்டத்தில் அவருக்கு உதவிச் செய்ய தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள அவரது நண்பரான ஆஷிஷ் சிங்கை அழைத்து தனது திட்டத்தை பற்றிக் கூறியுள்ளார்.
பின்னர் இருவரும் கடந்த டிச. 21 அன்று பரிபடா எனும் ஊருக்கு சென்றுள்ளனர். அங்கு ஆஷிஷின் நண்பரான கராமா என்பவரும் இவர்களுடைய திட்டத்தில் இணைந்துள்ளார்.
மூவரும் புதாபலாங்கா நதிக்கரையில் அமர்ந்து மது அருந்திக்கொண்டே அவர்களது கடத்தல் திட்டத்தைப் பற்றி பேசியுள்ளனர். அப்போது, வரும் பணத்தில் பங்குப்பிரிப்பது குறித்து வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதில், ஆத்திரமடைந்த ஆஷிஷ் சந்தனின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் கராமாவின் உதவியுடன் அவரது உடலை பாதிக்கொழுத்திவிட்டு அந்த நதிக்கரையிலேயே புதைத்துவிட்டு இருவரும் தப்பியோடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தப்பியோடிய இருவரின் மீதும் நேற்று (டிச.27) கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.