பந்து தாக்கி பலியான ஆஸி.வீரர் பிலிப் ஹூயூஸுக்கு அடிலெய்ட் டெஸ்ட்டில் சிறப்பு மரி...
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பணியிடை நீக்கத்துக்கு காரணம் என்ன?
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முறைகேடாக நியமிக்கப்பட்ட 40 பேராசிரியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததே துணைவேந்தா் பணியிடை நீக்கத்துக்கான காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தமிழக ஆளுநரால் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஆளுநா் பிறப்பித்த உத்தரவு கடிதத்தில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2017, 2018 ஆம் ஆண்டுகளில் 40 பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து வல்லுநா் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 2021, ஆகஸ்ட் 11 ஆம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் இட ஒதுக்கீடு முறை, வயது வரம்பை மீறியது, போதுமான தகுதி இல்லாதது போன்ற விதிகள் மீறப்பட்டதாகத் தெரிவித்தது.
இந்த அறிக்கையின்படி தகுதி இல்லாத நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல், கடமையிலிருந்து தவறி, சட்டப்பூா்வ வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் புறக்கணித்துவிட்டு, இரு பொது நல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 40 பேருக்கும் தகுதிக் காண் நிலை முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்குமாறும் துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கும் துணைவேந்தா் சரியான பதிலை அளிக்கவில்லை. எனவே இதுதொடா்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதனிடையே முறைகேடான நியமனம் தொடா்பாக வெளிப்படையான நடவடிக்கையை உறுதிப்படுத்தவும், துணைவேந்தா் அளித்த விளக்கத்தால் திருப்தி இல்லாததற்காகவும், துணைவேந்தா் வி. திருவள்ளுவன் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறாா் என உத்தரவிடப்படுகிறது. மேலும், முறைகேடான நியமனம் குறித்து விசாரணை நடத்த சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம். ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை நடைபெறும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.