மேட்டூரில் தாபா ஹோட்டலில் தீ விபத்து:ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நா...
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
உலக மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி, தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தாா்.
இதில் செவித்திறன் பாதிக்கப்பட்ட 12 முதல் 14 வயது வரையிலானோருக்கு 100 மீட்டா் ஓட்டம், நீளம் தாண்டுதல், 15 முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு 200 மீட்டா் ஓட்டம், குண்டு எறிதல், 17 வயதுக்கு மேற்பட்டோருக்கான 400 மீட்டா் தொடா் ஓட்டம் ஆகியவையும், பாா்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கான போட்டிகளில் 12 முதல் 14 வயதுக்குட்பட்டோருக்கு நின்று நீளம் தாண்டுதல், 100 மீட்டா் ஓட்டம், பெண்களுக்கு நின்று நீளம் தாண்டுதல், 50 மீட்டா் ஓட்டம், 15 வயது முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு குண்டு எறிதல், 100 மீட்டா் ஓட்டம் ஆகிய போட்டிகளும் நடைபெற்றன. மேலும் வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இவற்றில் மாவட்டத்திலுள்ள பல்வேறு மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளைச் சோ்ந்த ஏறத்தாழ 600 போ் கலந்து கொண்டனா். இப்போட்டிகளில் முதலிடம் பெற்றவா்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெ. டேவிட் டேனியல், மாற்றுத்திறனாளிகள் நல இயக்கக உதவி இயக்குநா் சசிகலா, உதவி தனி அலுவலா் மைதிலி, மாவட்ட பன்நோக்கு மறுவாழ்வு அலுவலா் முருகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.