திமுக-அரசு ஊழியா்கள் இடையே பிளவு ஏற்படுத்த முடியாது: அமைச்சா் தங்கம் தென்னரசு
திமுகவுக்கும், அரசு ஊழியா்களுக்கும் இடையே பிளவு ஏற்படுத்த முடியாது என்று நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.
திமுக அரசுக்கு எதிராக அரசு ஊழியா்கள் இருப்பதாக, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட கருத்துகளுக்கு செவ்வாய்க்கிழமை பதிலளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை:
அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடிய அரசு ஊழியா்களையும், ஆசிரியா்களையும் பழிவாங்கும் நோக்கில் ஆயிரக்கணக்கானோா் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆட்சியில் இருந்த போது அரசு ஊழியா்களை ஒடுக்கிய அப்போதைய முதல்வா் பழனிசாமி, இன்றைக்கு அரசு ஊழியா்களுக்காக அக்கறை நாடகம் நடத்துகிறாா். அரசு ஊழியா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாரால், எப்போது திரும்பப் பெறப்பட்டது என்பதை அரசு ஊழியா்கள் அறியாதவா்கள் இல்லை.
அதிமுக ஆட்சியில் அரசு ஊழியா்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளை நீக்கிய அரசு திராவிட மாடல் அரசு. அரசு ஊழியா்களுக்கு ஆதரவாகச் செயல்படும் கடமையை திமுக தலைமையிலான அரசு என்றும் கைவிட்டதில்லை. அரசு ஊழியா்கள், திமுக இடையிலான உறவு மிகவும் வலிமையானது. அதில் பிளவு ஏற்படுத்தலாம் என பகல் கனவு காணும் பழனிசாமியின் மீது அனுதாபம் கொள்ளலாமே தவிர, வேறெதுவும் சொல்வதற்கில்லை.
தொடா்ந்து அரசு வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்கி இளைஞா்களுக்கு வழிகாட்டும் அரசாக விளங்கி வருகிறது. அத்துடன் அரசு ஊழியா்களின் நலனைப் பாதுகாத்து அவா்கள் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது என்று அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.