செல்போனில் விடியோ பார்த்துக் கொண்டே சென்ற மாணவர்கள் மீது ரயில் மோதி ஒருவர் பலி
``திருநங்கையை பாலியல் தொந்தரவு செய்த வழக்கு”- டிஸ்மிஸ் செய்யபட்ட போலீஸ்!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் காவல் நிலையத்தில் வினோத் என்பவர் போலீஸாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆண்டு அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றினார். அப்போது அய்யம்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்த திரு நங்கை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட திருநங்கை வினோத் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் மீது திருநங்கை புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வினோத் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து விசாரணைக்கு இடைஞ்சல் ஏற்படக்கூடாது என்பதால் வினோத்தை திருவோணம் காவல் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்ததுடன், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், வினோத் மீதான புகாரில் நடைபெற்ற விசாரணையில் திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து போலீஸ் எஸ்.பி ஆஷிஷ் ராவத் திருவோணம் காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றிய வினோத்தை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், "போலீஸ் வினோத் அய்யம்பேட்டை பகுதியில் வசித்த திருநங்கை ஒருவரின் வீட்டுக்குள் இரவு நேரத்தில் அத்து மீறி புகுந்ததுடன் அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். நான் போலீஸ் இதை வெளியே சொன்னால் உனக்கு தான் பிரச்னை என மிரட்டியுள்ளார். தனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸே இப்படி நடந்து கொண்டதில் அதிர்ச்சியடைந்த அந்த திருநங்கை என்னவானாலும் பரவாயில்லை என தைரியமாக வினோத் மீது புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கில் வினோத்தை டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்" என்றனர்.