"K.R.Vijaya மேம்னால தான் நான் சினிமாவுக்குள்ள வந்தேன்" - Actress Dhakshayene Ope...
திருப்பத்தூர்: விகடன் செய்தி எதிரொலி; ரயில்வே பாலம் பாதையைச் சீரமைத்து அதிகாரிகள் நடவடிக்கை!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்னக்கம்மியம்பட்டு அருகே அமைந்துள்ளது ரயில்வே பாலம். நாட்றம்பள்ளி மற்றும் வாணியம்பாடியிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், அப்பகுதி மக்கள் என அனைவரும் இந்த வழியைப் பயன்படுத்தி வருகின்றனர். இங்குப் பல வருடங்களாகவே பொதுமக்கள் அவ்வழியைக் கடக்க பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இது குறித்து சின்னக்கம்மியம்பட்டு கிராம மக்களிடம் விசாரித்த போது, "இந்த வழியில் எப்போதும் தண்ணீர் நின்று கொண்டே இருக்கும். மழைக்காலங்களில் இடுப்பு அளவு தண்ணீர் தேங்கி நிற்கும். இந்த சூழல் இருப்பதால் பெரும்பாலான நேரங்களில் சுற்றிக்கொண்டு தான் எங்கள் ஊருக்கு வருகிறோம். ஆனால் நாங்கள் பெரும்பாலும் உபயோகப்படுத்துவது ரெட்டியூர் மற்றும் இந்த ரயில்வே வழி தான், காரணம் உணவகங்கள், காய்கறிக் கடைகள், அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகள், மருத்துவமனை போன்றவை அமைந்துள்ளன.
பிரச்னையே தண்ணீர் தேங்குவது தான். அது அப்படியே தேங்காமல் சென்றால், பாதிப்பு இருக்காது. பாதை மிகவும் பள்ளமாகவும், குண்டும் குழியுடனும் இருக்கிறது. போதாதற்கு ஏரியிலிருந்து தண்ணீர் உடைந்து இந்த பாதையில் சேர்கிறது. கிணறுகள் நிரம்பி வழிந்தாலும் இந்த பாதையில் தான் தேங்கி நிற்கும். ஆத்திர அவசரத்துக்கு மருத்துவமனைக்குக் கூட செல்ல முடியவில்லை.
மீறி வேகமாகச் சென்றால் வண்டியின் சைலென்சர்க்குள் தண்ணீர் புகுந்து, எங்களுக்குப் பெரிய செலவை ஏற்படுத்தி விடுகிறது. நாங்களும் பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் இது தொடர்பாகப் பல முறை கூறியுள்ளோம். அவர்களும் நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்கள். ஆனால் இதுவரை எதுவும் மாறவில்லை. இந்த வழியில் பயணிப்பதற்கு எதாவது ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்றனர்.
இந்த விவகாரம் குறித்து விகடன் தளத்தில் ஜனவரி 27-ம் தேதி, ஜோலார்பேட்டை ரயில்வே பாலம்: ``பல ஆண்டுகளாகப் புகார் அளித்தும் எதுவும் மாறவில்லை'' - குமுறும் மக்கள்... என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தோம். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு போயிருந்தோம்.
அதன் எதிரொலியாகச் செய்தி வெளியான மூன்றே நாள்களில் (30/01/2025) அன்று அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் தூர்வாரி தண்ணீர் செல்வதற்கு வழியை ஏற்படுத்தி, மண் கொட்டி பாதையினை சரிசெய்து சமதளப்படுத்தியுள்ளார்கள். ``நாங்கள் செல்வதற்கு வழியை ஏற்படுத்தி கொடுத்தற்கு மிகவும் நன்றி. ஆனால் இது எங்களுக்கு நிரந்தரமான தீர்வாக அமைய விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும்" என்கின்றனர் பொதுமக்கள்.