பார்சிலோனாவின் வைரம் பெட்ரிக்கு 2030 வரை ஒப்பந்தம் நீட்டிப்பு..! யாரெல்லாம் தக்க...
பாம்பன் ரயில் பாலங்கள் இடையே கடந்து சென்ற கடலோர காவல் படை கப்பல்: புதிய பாலத்தினை இயக்கி ஆய்வு!
நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் பாம்பன் கடலின் மீது உருவாக்கப்பட்டது பாம்பன் பாலம். நூற்றாண்டுகளை கடந்து இயங்கிவந்த இந்த ரயில் பாலத்தில் கடல் அரிப்பின் காரணமாக அவ்வப்போது பழுது ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரூ 550 கோடி செலவில் பாம்பன் கடல் மீது புதிய ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதன்படி கட்டப்பட்ட புதிய பாலத்தின் பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது பால பணிகளில் குறைபாடு உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை அளித்தார். இதனால் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் புதிய பாலம் பயன்பாட்டிற்கு வரவில்லை. மேலும் பாலத்தில் உள்ள குறைகளை ஆய்வு செய்ய 5 அதிகாரிகள் குழுவை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், புதிய பாலத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து விரைவாக ரயில் போக்குவரத்தினை துவங்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனிடையே இன்று கன்னியாகுமரி ரயிலில் வந்த பயணிகள் மண்டபம் ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்ட பின் காலியான ரயில் பெட்டிகளுடன் ராமேஸ்வரத்திற்கு சென்றது. இதே போல் சேது எக்ஸ்பிரஸ் ரயிலும் மண்டபத்தில் இருந்து பயணிகள் இன்றி ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்டது. இந்த இரு ரயில்களும் பராமரிப்பு பணிகளுக்காக ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக ரயில்வே அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து புதிய பாலத்தில் இடையே கப்பல்கள் செல்லும் வகையில் தூக்குபாலம் அமைக்கப்பட்டுள்ளது. செங்குத்து வகையிலான இந்த தூக்கு பாலத்தினை தூக்கி பார்த்து ஆய்வு செய்யும் வகையில் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கென பழைய மற்றும் புதிய தூக்கு பாலங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த பாதையின் வழியாக இந்திய கடலோரக் கடற்படை கப்பல் மற்றும் இரண்டு பெரிய மீன்பிடி படகுகள் சென்றன. இதன் மூலம் புதிய தூக்கு பாலம் நல்ல முறையில் சுமார் 15 அடி உயரத்திற்கு தூக்கி பார்த்து சோதனை செய்யப்பட்டது.
கப்பல் செல்லும் வகையில் ஒரே நேரத்தில் பழைய புதிய பாலங்கள் திறக்கப்பட்டதை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் பாம்பன் சாலை பாலத்தில் குவிந்திருந்தனர். ஒரே நாளில் காலி பெட்டிகளுடன் கூடிய ரயில்களும், கப்பல் செல்ல ஏதுவாக தூக்கு பாலத்தை திறந்து ஆய்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த புதிய பாலத்தின் வழியாக ராமேஸ்வரத்திற்கு மீண்டும் ரயில் போக்குவரத்து விரைவில் துவங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.