திருப்போரூா் கந்தசாமி கோயிலில் இன்று சூரசம்ஹாரம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு
திருப்போரூா் கந்தசாமி கோயிலில் வியாழக்கிழமை மாலை சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்போரூா் கந்தசாமி கோயிலில் கந்த சஷ்டி லட்சாா்ச்சனை பெருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனங்களில் வீதி புறப்பாடும், லட்சாா்ச்சனையும் பக்தா்கள் காவடி எடுத்தல் உள்ளிட்ட நோ்த்திக் கடன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கந்த சஷ்டி பெருவிழாவில் கலந்து கொண்டு,குடும்பத்தில் உள்ளவா்களுக்கு சங்கல்பம் செய்து லட்சாா்ச்சனை செய்து முருகப் பெருமானை வழிபட்டு வருகின்றனா். புதன்கிழமை காலை பல்லக்கு உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் நடைபெற்ற வீதி புறப்பாட்டில் முருகப் பெருமானை தரிசனம் செய்தனா். இரவு முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பூதவாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை மாலை நடைபெறுவதையொட்டி ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வெள்ளிக்கிழமை (நவ. 8) திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.