மதுபானக் கூடத்தில் மோதல்: அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது
திருமண நாள்! மறைந்த கணவரை நினைவுகூர்ந்த சீரியல் நடிகை!
திருமண நாளையொட்டி மறைந்த கணவர் அரவிந்தை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா நினைவுகூர்ந்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
திருமண நாளில் கணவர் வாங்கிக்கொடுத்து, விரும்பி சூடிக்கொள்ளும் பூக்களையும், அவரின் வாழ்த்துகளையும் தவறவிட்டு தற்போது தனித்து நிற்பதாக உருக்கம் தெரிவித்துள்ளார்.
கணவர் கற்றுத்தந்த அனுபவங்களுடன் தங்கள் கனவுகளையும் ஆசைகளையும் நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு அடியையும் முன்னோக்கி எடுத்து வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சின்ன திரை நடிகையான ஸ்ருதி சண்முகப்பிரியா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மூன்று முடிச்சு தொடரில் நடித்து வருகிறார்.
நாதஸ்வரம் தொடரின் மூலம் அறிமுகமான இவர், வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா, பொம்முகுட்டி அம்மாவுக்கு என்று பலத் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர்.

சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய ஸ்ருதி சண்முகப் பிரியா, கடந்த 2022 ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி பொறியாளரான அரவிந்த் சேகரை திருமணம் செய்து கொண்டார்.
வெளிநாட்டு சுற்றுப் பயணம் என வழக்கமான புதுமண ஜோடிகளைப் போல நாள்கள் மகிழ்ச்சிகரமாக கழிந்துகொண்டிருக்க, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாரடைப்பு காரணமாக அரவிந்த் சேகர் காலமானார்.

இதனிடையே மூன்றாம் ஆண்டு திருமண நாளையொட்டி தனது கணவரை நினைவுகூர்ந்து நடிகை சண்முகப் பிரியா உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ளதாவது, ''இனிய 3ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் அரவிந்த் சேகர். நீ என்னருகில் இல்லாததை நான் இன்று உணர்கிறேன். ஆனால், நாம் இருவரும் உருவாக்கிய நினைவுகளுடன் நம் உலகத்தில் வாழ்கிறேன். உன்னுடைய அன்பும், அரவணைப்பும் இன்று எனக்கு இல்லை.
நீ வாங்கிக்கொடுக்கும் பூவை மிஸ் பண்ணுகிறேன்.
3 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நமது எதிர்காலம் குறித்து ஏராளமான கனவுகளுடனும், கற்பனைகளுடனும் நாம் வாழ்க்கையைத் தொடங்கினோம்.
ஆனால், இன்று நீ கற்று கொடுத்த அனுபவங்களையும், வாழ்க்கை பாடங்களையும் கொண்டு ஒவ்வொரு அடியையும் முன்னோக்கி எடுத்து வைக்கிறேன். எப்போதும் உன்னுடைய மனைவியாகவே இருப்பேன். உன்னுடைய ஸ்ருதி அரவிந்தன்'' என்று என்று பதிவிட்டுள்ளார்.