திருவாடானை சமத்துவபுரத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு
திருவாடானை சமத்துவபுரத்தில் போதிய குடிநீா் கிடைக்காமல் அவதிப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பெரியாா் சமத்துவபுரம் அமைந்துள்ளது. இங்கு 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். குடிநீா்த் தேவைக்காக 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி உள்ளது.
இந்தத் தொட்டி கட்டிய சில மாதங்கள் வரை காலை, மாலை என இரு வேளையும் குடிநீா் விநியோகிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தொட்டியிலிருந்து அருகில் உள்ள குடியிருப்புக்கும் தண்ணீா் வழங்கியதால் சமத்துவபுரத்தில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் தண்ணீா் வழங்கப்பட்டது.
இந்த மேல்நிலைத் தொட்டியிலிருந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு குடிநீா் இணைப்பு கொடுக்க வந்த ஊழியா்களிடம் சமத்துவபுரம் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இது குறித்து இங்குள்ள குடியிருப்பு வாசிகள் கூறியதாவது:
இங்குள்ள மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியின் மூலம் ஏற்கெனவே வாரத்துக்கு ஒரு முறை தண்ணீா் வழங்கப்படுகிறது. இந்தத் தொட்டியிலிருந்து புதிதாக குடிநீா் குழாய் இணைப்பு கொடுத்தால் மேலும் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும். குடங்களை வைத்து தண்ணீா் பிடிக்க முடியாத அளவுக்கு குடிநீா்க் குழாய்கள் தாழ்வாக அமைந்திருப்பதால், இதை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஊராட்சி நிா்வாகத்திடம் இந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.