திருவாரூர்: ``கனமழைக்கு முன் கால்வாய்களைத் தூர்வாரும் பணி.. கண்துடைப்பா?'' - விவசாயிகள் சொல்வதென்ன?
`பருவமழை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எப்படி மழை வந்தாலும் சந்திப்பதற்கு அரசு தயாராக உள்ளது.' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கூறியிருந்தார். ஆனால் அவரின் கரங்களால் கடந்த சுதந்திர தினத்தன்று சிறந்த நகராட்சியாகத் தேர்வான திருவாரூர் நகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது பெரும் பெயரளவில் மட்டுமே நடைபெறுகிறது என்று விவசாயிகளும் அரசியல் பிரமுகர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது இயல்பை விட அதிகமாகப் பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனால், தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பார்வையிட கணிப்பாய்வு அலுவலர்களை நியமித்தார். திருவாரூர் மாவட்டத்தின் கணிப்பாய்வு அலுவலர் காயத்ரி கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், மாவட்டத்தினைப் பார்வையிட்டு 170 பகுதிகள் மழைக்காலத்தில் பாதிப்புக்குள்ளாகும் எனக் கூறினார். அதன்படி, திருவாரூர் நகராட்சி நிர்வாகம் மழைக்காலத்தின்போது மழைநீர் வெளியேற ஏதுவாக அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி வருகிறது.
"அரசியல்வாதிகளின் தலையீடு..."
இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ர.வினோதினியிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``திருவாரூர் மாவட்ட மக்களின் முதன்மையானத் தொழில் விவசாயமே. சுமார் 75 சதவிகித மக்கள் நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், விவசாய நிலத்திற்குச் செல்லக்கூடிய பாசன கால்வாய்களைக் காணும்போது மருத்துவ கழிவுகளாலும், வணிக நிறுவன கழிவுகளாலும் தூர்ந்துபோய் நிலைமை மோசமாக இருக்கிறது.
குறிப்பாகத் திருவாரூர் நகரப் பகுதிகளில் செல்லக்கூடிய கால்வாய்கள், கால்வாய்களா என்று கேள்வி எழுகிறது. திருவாரூர் நகராட்சி நிர்வாகம் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை முறையாகப் பயன்படுத்தாமல் வீண் செலவு செய்கின்றது. மழைக்காலம் வரும்போது மட்டும் கால்வாய்களைத் தூர்வாருவது என்று கண்துடைப்பு நாடகம் நடத்துகின்றனர். இதில் முக்கிய அரசியல்வாதிகளின் தலையீடு உள்ளதால் அரசு அதிகாரிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அஞ்சுகின்றனர். நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் முன்பு கால்வாய்களை முறையாகச் சீர்செய்ய வேண்டும் இல்லையெனில் எங்களின் கட்சியின் சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
``கழிவுகளால் பாசன வாய்க்கால் தூர்ந்து கிடக்கிறது.."
இதேபோல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி அவர்களிடம் பேசினோம். அவர், ``வெட்டாத்துப் பிரிவு ஓடம்போக்கி ஆற்றின் பிரிவு வாய்க்காலான பழவனகுடி பாசன வாய்க்காலின் மூலம் மொச்சக்கொடி, இழுவேனி, மருதப்பட்டினம், பள்ளிவாரமங்கலம், பழவனக்குடி உள்ளிட்ட கிராமங்களுக்குப் பாசன வாய்க்காலாகத் திகழ்ந்தது. மேற்கண்ட வாய்க்கால் கடந்த பலவருடங்களாகப் பாசனமில்லா வாய்க்காலாக மாறிவிட்டது. இவ்வாய்க்கால், திருவாரூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் செல்கிறது என்பதால் வீடுகளிலிருந்து விடப்படுகிற கழிவுநீர், குப்பை உள்ளிட்ட கழிவுகளால் பாசன வாய்க்கால் தூர்ந்து கிடக்கிறது.
வாய்க்காலைத் தூர்வாரி பாசனத்திற்குப் பயன்பெறும் வகையில் தருமாறு பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கடந்த காலங்களில் போராட்டம் அறிவிக்கப்பட்டு, திருவாரூர் நகராட்சி ஆணையர் நாங்கள் தூர்வாரி தருகிறோம் என்று ஒப்புக்கொண்டு ஆண்டுகள் இரண்டோடிவிட்டன. ஆனாலும், இதுவரை இதன்மீது திருவாரூர் நகராட்சி கவனம் செலுத்தவில்லை. அதேபோல, கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பொதுப்பணித் துறையும் இதன்மீது கவனம் செலுத்தவில்லை.
வாய்க்காலினுடைய தலைப்பை மாற்றித் தரக்கோரி அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்கள் சிறப்புக் கவனம் செலுத்தி மேற்கண்ட பழவனக்குடி பாசன வாய்க்காலை நடப்பு ஆண்டிலேயே துர்வாரிக் கொடுத்தால் மேற்கண்ட கிராமத்தினுடைய விவசாயிகள் பயன்பெறுவார்கள். மாற்றுத்தொழில் இல்லாத பகுதியான திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மழையை மட்டும் நம்பி ஒரு சில இடங்களில் விவசாயம் செய்து அதிலும் நஷ்டம் அடைந்து வருகிறார்கள். மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் அப்பகுதியில் விவசாயிகளைத் திரட்டி எங்கள் அமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்ற அறிவிப்பை விடுத்தார்.
சரி செய்வார்களா?
மேலும், இதுகுறித்து திருவாரூர் நகராட்சி ஆணையரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, ``நான் பணிக்கு இப்போதுதான் வந்தேன். உங்களுக்கு நகராட்சி பொறியாளர் சதீஷ் பாபு அவர்கள் தொலைபேசி எண் அனுப்புகிறேன். அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்" என்று அவர் கூறிவிட்டார். ஆனால், அப்படி எந்த தொலைபேசி எண்ணும் வரவில்லை. பிறகு, தொலைபேசியில் அழைத்த திருவாரூர் நகராட்சியின் பொறியியல் எழுத்தர் சசிகுமார், ``இந்தக் கால்வாய் பொதுப்பணித்துறைக்குக் கீழ் வரக்கூடியது. மழைக்காலத்திற்காகத் தற்சமயத்திற்கு நகராட்சியின் சார்பில் அப்பணி மேற்கொள்ளப்பட்டது" என்று கூறினார்.
இப்பிரச்னை குறித்து செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) மா.கோ. இராஜேந்திரனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால், தொடர்புகொள்ள முடியவில்லை. இப்போது, வடகிழக்கு பருவமழை அதிகரிக்கும் முன்பு பழவனக்குடி வாய்க்காலைச் சீர்செய்ய வேண்டும் என்பதே விவசாய அமைப்புகள் மற்றும் அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb