`லிஃப்ட்டையே காணோம்; ரூ.27 லட்சம் எங்கே?' - ஒப்பந்ததாரருடன் சிக்கிய பொதுப்பணித்துறை அதிகாரிகள்!
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கடந்த 2017 - 2018ம் ஆண்டில் ஆய்வகம், தீவிர சிகிச்சைப் பிரிவு, டயாலிசிஸ், லிஃப்ட் உள்ளிட்ட வசதிகளுடன் புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம் கட்டுவதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டன.
வாலாஜாபேட்டை தாலுகா மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்கிற ஒப்பந்ததாரர், டெண்டர் எடுத்து பணிகளைத் தொடங்கினார். 2018 பிப்ரவரி மாதத்தில், கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. லிஃப்ட் மட்டும் அமைக்கப்படவில்லை. ஆனாலும், லிஃப்ட் அமைக்கும் பணிக்காக ரூ.27,27,500ஐ விடுவித்து, ஒப்பந்தாரரிடம் வழங்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக, `லிஃப்ட்டையே காணோம்; ரூ.27 லட்சம் எங்கே?’ என்று மருத்துவத்துறை அதிகாரிகள் கேள்வியெழுப்பிய பிறகே 2022-ம் ஆண்டு லிஃப்ட் அமைப்பதற்கான பொருள்கள் வாங்கப்பட்டு, 2023 மார்ச் மாதம் லிஃப்ட் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டு, மருத்துவத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் லிஃப்ட் அமைப்பதற்கு முன்கூட்டியே ஒப்பந்ததாரருக்கு நிதியை முறைகேடாக விடுவித்தது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸாருக்குப் புகார்கள் சென்றது. இந்தப் பணிகள் டெண்டர் விடப்பட்ட காலத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்தக் காரணத்தினால், இப்புகார் குறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சங்கர் விசாரணை நடத்தினார்.
முறைகேடுகள் கண்டறியப்பட்டதையடுத்து, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்களாக இருந்த முரளிதரன், செந்தில்குமார் மற்றும் உதவி செயற்பொறியாளராக இருந்த தேவன், இளநிலைப் பொறியாளராக பணியாற்றிவந்த ராஜாமணி மற்றும் ஒப்பந்ததாரர் செந்தில்குமார் ஆகிய 5 பேர் மீதும் நவம்பர் 20-ம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.
வழக்கில் சிக்கியுள்ள செயற்பொறியாளராக இருந்த முரளிதரன் கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியன்றே ஓய்வுபெற்றுவிட்டார். அதேபோல், இன்னொரு செயற்பொறியாளர் செந்தில்குமார் இந்த ஆண்டு மே 31-ம் தேதி பணி ஓய்வு பெற இருந்தார். குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அவரின் பணி ஓய்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. மற்ற 2 அதிகாரிகளும் தொடர்ந்து பணியில் இருக்கின்றனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையையும் வேலூர் மாவட்ட தலைமை நீதிபதியிடம், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சமர்பித்திருக்கின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...