‘வணங்கான்... கனத்த இதயத்துடன்...’ அருண் விஜய்யின் திடீர் பதிவு!
திரைப்பட நாயகி! தன்னந்தனியாக உத்தரகண்ட் கிராமத்தில் வாழும் 80 வயதுப் பெண்!
உத்தரகண்ட் மாநிலம், கட்திர் என்ற கிராமமே ஏதோ பேய் படங்களில் வரும் கிராமத்தைப் போல காணப்பட்டாலும், அந்த கிராமத்துக்கு இன்னமும் உயிர்த் துடிப்பாய் வாழ்ந்துகொண்டிருப்பவர் ஹீரா தேவி. இவருக்கு வயது 80. இவர் ஒரு திரைப்பட நாயகியும் கூட.
தற்போது, இவர் நடித்த பைரே படம், திரையிடப்படும் சர்வதேச விழாவில் பங்கேற்க இஸ்டோனியா தலைநகர் தல்லின் சென்றிருக்கிறார்.
கட்திர் எனப்படும் மலைக் கிராமத்தில் வசதிகள் இல்லாததால், பலரும் தங்களது வீடுகளை அப்படியே விட்டுவிட்டு வேறு இடங்களுக்குக் குடிபெயர, தனது எருமைமாடுகளை வைத்துக்கொண்டு அந்த கிராமத்திலேயே வாழ்ந்து வருகிறார் ஹீரா தேவி.
இவரது வாழ்க்கையை ஒட்டி தயாரான ஒரு படத்தில் நடிக்க ஆள் தேடிக்கொண்டிருந்த படக்குழுவினருக்கு ஹீரா தேவி பற்றிய தகவல் பறந்தது. பைரே என்ற திரைப்படத்தில் நடிக்க ஹீரா தேவி ஒப்புக்கொண்டதே பெரிய கதை.
திரைப்பட ஷுட்டிங் நடக்கும் இடத்துக்கு தான் செல்ல வேண்டும் என்றால், தனது வாழ்க்கைக்கே ஆதாரமாக விளங்கும் எருமை மாடுகளை யார் கவனித்துக்கொள்வார்கள் என்ற கவலையால் அவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார். பட இயக்குநர் வினோத் கப்ரி, தில்லியில் பணியாற்றி வரும் மூத்த மகனிடம் சென்று விஷயத்தைச் சொல்லி, தாயை சம்மதிக்க வைக்க வற்புறுத்தியிருக்கிறார். பிறகு, மகனும் படத்தில் நடித்துக்கொடுக்குமாறு தாயிடம் சொன்னபிறகே அவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தில், முன்னாள் ராணுவ வீரரும், நாடகக் கலைஞருமான பதம் சிங் ஆண் வேடத்தில் நடித்திருக்கிறார்.
அவரது நடிப்பில் உருவான பைரே திரைப்படம் இஸ்டோனியாவில் நடைபெறும் 28வது தல்லின் பிளாக் நைட்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் அவர் பங்கேற்க வேண்டும் என படக்குழு விரும்பினாலும் மீண்டும் அதே கவலைதான் ஹீரா தேவிக்கு.
இத்தனை நாள்கள் தனது எருமைமாடுகளை யார் கவனித்துக்கொள்வார்கள். தான் இல்லாமல் எருமை மாடுகள் என்ன ஆகும் என்பதே. ஆனால் படக்குழுவினர் விடவில்லை.
பட இயக்குநர் வினோத் கப்ரி, ஹீரா தேவியை அழைத்துச் செல்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து, ஹீரா தேவியின் மகள், பராணி கிராமத்திலிருந்து தாய் வீட்டுக்கு வந்து, எருமைகளை கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை மதியம் அவர் வீட்டுக்கு வந்ததும், எருமைகளை மகளின் கவனிப்பில் விட்டுவிட்டு ஹீரா தேவி தல்லின் புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் கப்ரி மற்றும் பைரே படத்தில் நடித்திருக்கும் பதம் சிங் ஆகியோரும் தல்லின் சென்றுள்ளனர். தான் நடித்த படம் ஒன்று, சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதை நேரில் கண்டு மகிழவிருக்கிறார் ஹீரா தேவி. அவரது எருமை மாடுகளைப் பற்றிய கவலை இல்லாமல் இருப்பார் என்றே அனைவரும் நம்புகிறார்கள்.