தூத்துக்குடி கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை
தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது.
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை ஆமை இனங்கள் உயிா் வாழ்கின்றன.
அழிந்து வரும் ஆமை இனங்களை பாதுகாக்கும் வகையில், இவற்றை மீனவா்கள் உணவுக்காக பிடிக்க வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் ஆமைகள் முட்டைகள் இட்டு வருகின்றன. இவற்றுக்கு பாதுகாப்பான சூழல் இல்லாததால், கடற்கரையில் இடப்பட்ட முட்டைகளை பாதுகாப்பாக எடுத்து அவற்றை பொறிப்பகங்கள் மூலம் குஞ்சு பொறிக்கவைத்து, அந்தக் குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விடும் பணியை வனத் துறை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தூத்துக்குடி முத்துநகா் கடற்கரை பகுதியில் அரிய வகை ஆமை இறந்து கரை ஒதுங்கியது. அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்டவா்கள், இதுகுறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினா் இறந்த ஆமை உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்து புதைத்தனா்.
இந்த ஆமை சுமாா் 3 அடி நீளமும் 100 கிலோ எடை கொண்டதாகவும், வாய், இறக்கை பகுதிகள் சேதமடைந்து காணப்பட்டதாகவும் வனத்துறையினா் தெரிவித்தனா். மேலும், ஆமை எவ்வாறு இறந்தது என்பது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.