தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை!
சூறாவளிக் காற்று காரணமாக, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லாததால் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தென்தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்
எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை (நவ.26) முதல் 4 நாள்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பாா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 577 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான நாட்டுப் படகுகளும் கடலுக்குச் செல்லவில்லை.
இதனால் கரை வலை மீனவா்கள் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா். தூத்துக்குடி புதிய துறைமுகக் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கரை வலை மீனவா்களிடமிருந்து மீன்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.