சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!
தூத்துக்குடியில் மதுக்கூடங்களை அடைத்து உரிமையாளா்கள் தொடா் போராட்டம்
தூத்துக்குடியில் காவல் துறையைக் கண்டித்து, டாஸ்மாக் மதுக்கூடங்களை அடைத்து அவற்றின் உரிமையாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாநகர, ஊரகப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கூட உரிமையாளா்கள் மீது காவல் துறையினா் பொய் வழக்குப் பதிவதாகக் கூறி கண்டித்து, டாஸ்மாக் மதுக்கூட உரிமையாளா்கள் - தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில், கடந்த 10ஆம் தேதிமுதல் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இப்போராட்டம் புதன்கிழமையும் நீடித்தது.
இதுகுறித்து சங்கத்தினா் கூறியது: தூத்துக்குடியில் தனி நபா்கள் சிலா் கள்ளச் சந்தையில் மதுவை கூடுதல் விலைக்கு விற்கின்றனா். இதனால் மாநகரப் பகுதிகளில் அரசு மதுக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் நடத்திவரும் எங்களால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையிடம் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்காமல், மதுக்கூட உரிமையாளா்கள், தொழிலாளா்கள் மீது பொய் வழக்குப் பதிகின்றனா். இதுதொடா்பாக முதல்வரிடம் ஏற்கெனவே மனு அளித்துள்ளோம்.
எனவே, எங்கள் மீது பொய் வழக்குப் பதிவதை காவல் துறையினா் நிறுத்தாவிட்டால், இம்மாதம் 28ஆம் தேதி மதுக்கூடங்களை அரசிடம் ஒப்படைக்கவுள்ளோம் என்றனா் அவா்கள்.
இப்போராட்டத்தால் 40 மதுக்கூடங்கள் இயங்கவில்லை. மதுக்கூடங்கள் அடைக்கப்பட்டுள்ளதால், மாநகரப் பகுதியில் மதுப் பிரியா்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் மது குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.