SSMB29: முடிவுக்கு வந்த ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தின் ஒடிசா படப்பிடிப்பு; வெளிய...
தென் மாநிலங்களில் சமமான தொகுதி மறுவரையறை செயல்முறை அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்க: காங். எம்.பி. வலியுறுத்தல்
நமது நிருபா்
தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் சமமான தொகுதி மறுவரையறை செயல்முறை அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்களவையில் கரூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் செ.ஜோதிமணி வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் மக்களவையில் செவ்வாய்க்கிழமை விதிஎண் 377-இன் கீழ் முன்வைத்த கோரிக்கை: பல தசாப்தங்களாக, தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்கள் மத்திய அரசால் ஊக்குவிக்கப்பட்ட மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் பொறுப்பாகவும் தொலைநோக்குச் சிந்தனையுடனும் இருந்து வருகின்றன. இப்போது, எங்கள் வெற்றிக்காக நாங்கள் தண்டிக்கப்பட்டு வருகிறோம்.
தென் மாநிலங்கள் தொகுதிகளை இழக்காது என்று மத்திய உள்துறை அமைச்சா் கூறுகிறாா். மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை மீதான முடக்கம் நீக்கப்பட்டால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய மாநிலங்களுக்கு விகிதாச்சாரமற்ற அரசியல் அதிகாரம் வெகுமதி அளிக்கப்படும்.
அதேவேளையில், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தங்கள் குரல்கள் பலவீனமடைவதை காண நேரிடும். இது தமிழ்நாட்டையும், ஒட்டுமொத்த தென்னகத்தையும் தேசிய முடிவெடுப்பதில் குறைந்த செல்வாக்குடன் அரசியல் ரீதியாக ஒதுக்கி வைக்கும் நிலையை உருவாக்கும். எங்கள் பிரதிநிதித்துவம் திட்டமிட்டு அழிக்கப்படும்போது தெற்கு அமைதியாக இருக்காது.
நியாயமான, வெளிப்படையான மற்றும் சமமான தொகுதி மறுவரையறை செயல்முறைக்கு குறைவான எதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆகவே, மத்திய அரசு உடனடியாக தொகுதி மறுவரையறையின் அடிப்படையை தெளிவுபடுத்த வேண்டும். தமிழகம் மற்றும் தென் மாநிலங்கள் இரண்டாம் தர அரசியல் அமைப்புகளுக்குத் தள்ளப்பட மாட்டாது என்றும் உறுதியளிக்க வேண்டும் என்றாா் அவா்.
சுப்பராயன் கோரிக்கை: மக்களவையில் செவ்வாய்க்கிழமை திருப்பூா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினா் கே.சுப்பராயன் விதிஎண் 377-இன் கீழ் முன்வைத்த கோரிக்கை: 2026- க்கு பிறகு 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை செயல்முறையை ஒத்திவைக்க வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதில் உள்ள குறைபாடுகள் மற்றும் நியாயமின்மை பற்றி விவாதிக்க வேண்டும். அடுத்த பொதுத் தோ்தல் தொகுதி மறுவரையறை அடிப்படையில் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. இந்தச் செயல்முறை 2026- ஆம் ஆண்டிற்குள் முடிவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தொகுதி மறுவரையறை பணியானது தென் மாநிலங்களான தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம், தெலங்கானா, ஆந்திராஆகியவற்றில் இடங்களைக் குறைக்கும் என்று அஞ்சப்படுகிறது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது, தென் மாநிலங்களைவிட வட மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் அதிக இடங்கள் கிடைக்கும். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாகச் செயல்படுத்திய தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கும்.
எனவே, தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளை 2026-க்கு அப்பால் 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன். மேலும், 1971-இன் விகிதாச்சார விகிதத்தை பராமரிக்கும் வகையில் அரசமைப்புச்சட்டத்தை திருத்த வேண்டும் என்றாா் அவா்.
