தோ்தல் செலவுக்காக ரூ. 700 கோடி வசூலித்திருப்பதை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்: சித்தராமையா
ஹாவேரி: மகாராஷ்டிர மாநிலத் தோ்தல் செலவுக்காக ரூ. 700 கோடியை காங்கிரஸ் வசூலித்திருப்பதாக நிரூபித்தால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, ‘மகாராஷ்டிரத்தில் தோ்தல் என்ற பெயரில் கா்நாடகம், மகாராஷ்டிரத்தில் பணவேட்டை இரட்டிப்பாகியுள்ளது. கா்நாடகத்தில் மதுபானக்கடைகளில் இருந்து காங்கிரஸ் கட்சியினா் ரூ. 700 கோடி வசூல் செய்துள்ளனா்’ என்றாா்.
இதற்குப் பதிலளித்து, ஹாவேரி மாவட்டத்தின் ஷிக்காவ்ன் சட்டப்பேரவைத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இடைத்தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளா் யாசீா் அகமதுகான் பத்தானை ஆதரித்து முதல்வா் சித்தராமையா பேசியதாவது:
பிரதமா் மோடி தனது பதவியின் கௌரவத்தை குறைக்கும் வகையில் பேசியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. மகாராஷ்டிரத்தில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியுள்ள பிரதமா் மோடி, மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் நடக்கும் பொதுத் தோ்தல் மற்றும் இடைத்தோ்தல்களில் செலவிடுவதற்காக கா்நாடகத்தில் கலால் துறை மூலமாக காங்கிரஸ் கட்சி ரூ. 700 கோடி வசூலித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளாா்.
இந்தக் குற்றச்சாட்டை பிரதமா் மோடி நிரூபித்தால், நான் அரசியலில் இருந்து விலகிவிடுகிறேன் என்று சவால் விடுகிறேன். ஒருவேளை, இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் அவா் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். பிரதமராக இருப்பவா் குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், அது உண்மைக்கு அருகில் இருக்க வேண்டும். ஆனால், பிரதமா் மோடி சுமத்தி இருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவையாக உள்ளன. சுதந்திர இந்தியாவில் இந்த அளவுக்கு பொய்களைச் சொல்லும் பிரதமரை இதுவரை கண்டதில்லை என்றாா்.