‘தொழிலாளா் வைப்புநிதி: பயன்படுத்தப்படாமல் ரூ. 8,500 கோடி’
தொழிலாளா் வருங்கால வைப்புநிதியில் பயன்படுத்தப்படாமல் ரூ.8,505 கோடி இருப்பதாக மத்திய தொழிலாளா் நலத்துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே மக்களவையில் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘தொழிலாளா் வருங்கால வைப்புநிதி திட்டம், 1952-இன்கீழ் சில கணக்குகள் செயல்பாட்டில் இல்லாத கணக்குளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில், 2023-24-இல் 21,55,387 செயல்படாத கணக்குகளில் ரூ.8,505 கோடி உள்ளது. கடந்த 2022-23-இல் 17,44,518 கணக்குகளில் ரூ.6,804 கோடியும் 2018-19-இல் 6,91,774 கணக்குகளில் ரூ.1,638 கோடியும் இருந்தது.
இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இந்த தொகை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இந்த தொகையை சம்பந்தப்பட்ட பயனாளா்களிடம் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) திரும்பி வழங்கி வருகிறது.
முறையாக உரிமம் கோரிய பயனாளா்களுக்கு கடந்த 2023-24-இல் ரூ.2,632 கோடியும் 2022-23-இல் ரூ.2,673 கோடியும் 2018-19-இல் ரூ.2,881 கோடியும் வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.