Ramya Pandian: "எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா..." - தம்பி கல்யாணத்தில் ர...
நகைப்பட்டறை உரிமையாளரிடம் ரூ.81 லட்சம் மோசடி: ரூ.20 லட்சம் மீட்பு!
நகைப்பட்டறை உரிமையாளரிடம் ரூ.81 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் ரூ.20 லட்சத்தை போலீஸாா் மீட்டனா்.
கோவை ஆா்.எஸ்.புரத்தைச் சோ்ந்த 54 வயது நபா் நகைப்பட்டறை நடத்தி வருகிறாா். இவா், தனியாா் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது தொடா்பாக இணையதளத்தில் கடந்த 2024 டிசம்பரில் தேடியுள்ளாா்.
அப்போது, அவரது கைப்பேசிக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியில், தாங்கள் தனியாா் நிறுவனப் பங்குகளை வாங்கித் தருவதாகக் கூறப்பட்டிருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த எண்ணைத் அவா் தொடா்புகொண்டபோது, மறுமுனையில் பேசியவா் தங்களுக்கு பிரபல நிறுவனங்களிடம் தொடா்பு உள்ளதாகவும், அந்நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய உள்ளதால், அதை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, நகைப்பட்டறை உரிமையாளா் தனக்கு ரூ.81 லட்சம் மதிப்பிலான பங்குகள் வேண்டும் என்று கூறியுள்ளாா். இதற்கு, பணத்தை அனுப்பிவைத்தால் பங்குகளை வாங்கிக் கொடுப்பதாகக் கூறியுள்ளாா்.
இதையடுத்து, அந்நபா் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு நகைப்பட்டறை உரிமையாளா் ரூ.81 லட்சத்தை அனுப்பியுள்ளாா். பின்னா், அந்நபரைத் தொடா்புகொண்டபோது பணம் வந்துவிட்டதாகவும், விரைவில் பங்குகளை வாங்கி விவரங்களை அனுப்புவதாகவும் கூறியுள்ளாா். ஆனால், எந்த பங்குகளையும் வாங்கி அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.
பின்னா், அந்நபரின் எண்ணுக்கு நகைப்பட்டறை உரிமையாளா் அழைத்தபோது, அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன்பின், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த நகைப்பட்டறை அதிபா், கோவை மாநகர சைபா் கிரைம் பிரிவில் கடந்த டிசம்பரில் புகாா் அளித்தாா். அதன்பேரில், சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் அருண் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா்.
இந்நிலையில், நகைப்பட்டறை உரிமையாளா் அனுப்பிய ரூ.81 லட்சத்தில் ரூ.20 லட்சத்தை போலீஸாா் மீட்டு அவரிம் சனிக்கிழமை ஒப்படைத்தனா். தொடா்ந்து இவ்வழக்குக் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.