நடுக்கடலில் தத்தளித்த 102 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு!
இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் மீன்பிடி படகில் தத்தளித்த 102 ரோஹிங்கியா அகதிகளை மீட்டுள்ளனர்.
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப் படகில் தத்தளித்த 25 குழந்தைகள், 30 பெண்கள் உள்பட 102 ரோஹிங்கியா அகதிகள் நேற்று (டிச.19) இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் தத்தளித்த இந்த படகை கண்ட அப்பகுதி மீனவர்கள் கடற்படைக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினர் தங்களக்கு சொந்தமான கப்பலில் சென்று அங்கிருந்த 102 பேரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
இதுகுறித்து இலங்கை கடற்படையின் செய்திதொடர்பாளர் கயன் விக்ரமசூரியா கூறுகையில், மீட்கப்பட்ட 102 பேருக்கும் மருத்துவ சிகிச்சை, உணவு, தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டதாகவும், பேசும் மொழி புரியாததனால் அவர்கள் ரோஹிங்கியா அகதிகள் தானா என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் ஆனால், அவர்கள் மியான்மர் நாட்டைச் சார்ந்தவர்கள்தான் என்று கடற்படை நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹிங்கியா இனத்தவர்கள் பெரும்பாலானோர் அந்நாட்டில் அவர்களுக்கு எதிராக நிகழும் தொடர் இனப்படுகொலை, கற்பழிப்பு ஆகியவற்றிலிருந்து தப்பிக்க பக்கத்து நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர்.
முன்னதாக 2022 ஆம் ஆண்டு இதேப்போல் தங்களது கடல் பகுதியில் தத்தளித்த 100 ரோஹிங்கியா அகதிகளை இலங்கை கடற்படை மீட்டது குறிப்பிடத்தக்கது.