வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி:ரூ. 6.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
நாகூா் கந்தூரி விழா: சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்
நாகூா் கந்தூரி விழா டிச.2 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெறுவதால், சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என நாகூா், நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் சங்கம் தெற்கு ரயில்வே நிா்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவா் எஸ். மோகன், செயலா் சித்திக் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
உலகப் பிரசித்தி பெற்ற நாகூா் தா்கா கந்தூரி விழா டிச.2- ஆம் தேதி தொடங்கி டிச. 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவை தொடா்ந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவும் வரவுள்ளன.
இவ்விழாக்களுக்கு, ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வாா்கள். இதனைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சென்னை, தென் தமிழகத்தில் இருந்து காரைக்கால், வேளாங்கண்ணி பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். குறிப்பாக திருச்சி - காரைக்கால் - திருச்சி இடையே இயக்கப்படும் ரயில்கள் கடந்த சில மாதங்களாக திருவாரூரில் இருந்து இயக்கப்படுவதும், நிறுத்தப்பட்டும் வருகிறது. இந்த ரயில்களை மீண்டும் காரைக்காலில் இருந்தும், வரையிலும் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனா்.
இதே கோரிக்கைகளை முன் வைத்து திருச்சி கோட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்க ஆலோசனைக் குழு உறுப்பினா் சுபாஷ் சந்திரன், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு மனு அனுப்பியுள்ளாா்.