நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் எம்.பி. ஆய்வு: கூடுதலாக 5 பேருந்துகள் இயக்க நடவடிக்கை
நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டாவது நாளாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டு, பயணிகள் நலன்கருதி கூடுதலாக 5 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட முதலைப்பட்டியில், கலைஞா் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த பேருந்து நிலையத்தில் 51 அரசு, தனியாா் பேருந்துகள் நிற்கும் வகையில் இட வசதி உள்ளது.
புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததால் பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடியது. இதற்கிடையே, வெளியூா் பயணிகள் நாமக்கல் நகருக்குள் வருவதற்கு சிரமப்படும் நிலை உள்ளதாகவும், இரவு நேரத்தில் போதிய நகரப் பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகும் சூழல் இருப்பதாகவும் தகவல் வெளி வந்தது.
இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் திங்கள்கிழமை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது, பயணிகள், ஓட்டுநா், நடத்துநா்களின் பயன்பாட்டுக்காகக் கடைகளை விரைந்து திறக்கவும், அனைத்து பேருந்துகளும் பயணிகளை சிரமமின்றி அழைத்துச் செல்லவும், பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.
மேலும் பயணிகளின் நலனுக்காக, பழைய பேருந்து நிலையம் முதல் வள்ளிபுரம் சாலை வரை இரண்டு பேருந்துகள் புதிதாக இயக்கப்பட உள்ளதாகவும், பழைய பேருந்து நிலையம் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரையில் ரூ. 10 கட்டணத்தில் இரண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து நாளைய முதல் புதிய பேருந்து நிலையம் வரை ரூ. 7 கட்டணத்தில் ஒரு பேருந்தும் கூடுதலாக இயக்கப்படுவதாக மக்களிடையே தெரிவித்தாா்.
அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நகரப் பேருந்துகள் தொடா்ச்சியாக இயக்கப்படும். இந்தப் பேருந்துகளில் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் மகளிா், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்தாா். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ஆா்.மகேஸ்வரி, செயற்பொறியாளா் சண்முகம், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.